திஸ்மாஸ் டி செல்வா
‘அட இப்படிக் கூட நடக்குமா?
’‘நடந்து விட்டதப்பா….’‘
ரொம்ப நல்ல பயலாச்சே!
’‘எல்லாம் வேஷம்’
கன்னத்தில் கை வைத்தபடி சுப்பிரமணியன் குடும்பமே தெருவில் உட்கார்ந்திருந்தது.
‘ஈபி காலையிலேயே வந்து ‘பீஸை‘ புடுங்கிக் கொண்டு போய்விட்டானாம்.
காரணம்?‘
கரண்ட் பில் கட்ட வைத்திருந்த பணம் ஆயிரத்து ஐநூறையும் அப்படியே ‘லபக் கொண்டு ‘சிவாஜி படம் பார்த்து விட்டு வந்திருக்கிறான் அவனுடைய சீமந்தப் புத்திரன்.
‘எங்களை இருட்டுல படுக்க வச்சது கூடப் பரவாயில்லப்பா… பெத்த பாவத்துக்கு அனுபவிச்சுதான் தீரணும். குடித்தனம் இருக்கிறவங்க என்ன பண்ணாங்க? ஒவ்வொருத்தரும் கேக்குற கேள்விக்கு என்ன பதிலச் சொல்வேன்?’
பயலை செமத்தியாகக் கவனித்திருப்பான் போலிருக்கு.
சுருண்டு படுத்திருந்தான்.
‘ டேய் குமாரு… எழுந்திருடா. ..’
அசையவில்லை.
‘தம்பி ரஜினி குமாரு.. எழுந்திருப்பா செல்லம்’
ம்ஹீம்…! எழுந்திருக்க முயன்றான். முடியவில்லை.
வாங்கிய அடி அப்படி…
‘ பொறுக்கி குமாருன்னு கூப்புடு. அதுதான் அவனுக்கு சரியான பேரு’
‘அட சும்மாயிருக்க மாட்டியா சுப்பிரமணி. இரண்டுக்கும் அர்த்தம் ஒண்ணுதான்.’
எப்படியோ கஷ்டப்பட்டுத் தூக்கி ரஜினியை உட்கார வைத்தோம்.
சினிமாவில் அடி வாங்கிய வில்லனைப் போல் முகம் வீங்கிப் போயிருந்தான்
.‘நடந்தது நடந்து போச்சு. இனிமே இப்பிடி ஒரு தப்பை கனவிலயும் நினைக்காத. அப்பன் சம்பாத்தியத்தில படிக்கிற பய நீ திருட்டுத்தனமா சினிமாவுக்குப் போனதே தப்பு. இந்த லட்சணத்துல ஒரு கும்பலையே கூட்டிட்டுப் போயி கரண்டு பில்லுக்குக் கட்ட வேண்டிய காசை காலி பண்ணியிருக்குற…’
சுப்பிரமணி பொங்கியெழுந்தான்
.‘நல்லா கேள்வி கேக்குற போ… இருக்குற இருப்பில கும்பல் வேறயா? இவன் ஒரு ஆளே ஆயிரத்து ஐநூறுக்கும் படம் பாத்துட்டு வந்திருக்கான். ’
திடுக்கிட்டேன். ‘எத்தனை படமெடா?’‘
அட… ஒரே படம்தாம்பா...
’‘என்ன அக்குறும்புடா இது.. ஒரே ஆளுக்கு ஒரு படத்துக்கு ஆயிரத்து ஐநூறா? ஏண்டா இப்பிடி ‘பிளாக் வாங்கிப் பாக்கலேன்னா வானம் இடிஞ்சு உன் தலையில விழுந்திடுமாகொஞ்சம் சீக்கிரமாப் போய் லைன்ல நின்னு கவுண்டர்லகூட வாங்கியிருக்கலாமே...
’‘யோவ்… நெசமாவே நீ இந்த ஊர்லதான் இருக்கியா? சுத்த வௌரங்கெட்டவனா பேசிக் கிட்டிருக்குற… டிக்கெட்டை ஆயிரத்து ஐநூறுக்கு வித்தது பிளாக்குல இல்ல… கவுண்டர்ல தானாம்.’
‘ இதென்ன பகல் கொள்ளை? இன்ன விலையில தான் டிக்கெட்டை விக்கணும்னு அரசாங்கமே சொல்லியிருக்கு. இப்படி இருபது மடங்கு, முப்பது மடங்கு ஏத்தி வித்ததை போலீசு கண்டுக்கலையா?’
‘ரஜினி கலைஞரைக் ‘கண்டுகிட்டதால் போலீசு இவங்களைக் ‘கண்டுக்கல
‘சிவாஜி படத்தின் வெற்றிக்கு நீங்க எந்த அளவு காரணமாக இருந்திருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும், நன்றி அய்யா என்ற ரஜினியின் மேடைப் பேச்சை படித்திருந்தால் இந்தக் கேள்வியை நீ கேட்டிருக்க மாட்ட…’
கிளம்பத் தயாரானேன் .
‘ஒம் பையன நான் என்னமோ நெனச்சேன். அவன் உண்மையிலேயே ரொம்ப நல்லவன்தான். அதனாலதான் கரண்டு பில்லு காசை மட்டும் எடுத்திட்டு தனியா படத்துக்குப் போயிருக்கான். ப்ரெண்டுகளையும் சேத்துக்கிட்டிருந்தான்னா வீட்டுப் பத்திரத்தை மார்வாடி கடையில கொண்டு வச்சிதான் படத்தைப் பார்த்திருப்பான். நல்ல வேளை நீ தப்பிச்ச.’
அண்மையில்தான் அந்த அதிசயம் நடந்தது.
பாலாறு, பெரியாறு, டாஸ்மாக், டான்சி அனைத்திலும் இரு துருவங்களாக இருந்த திராவிட இயக்கத் தலைமைகளை ஒரே துருவமாக்கி ஒன்றாக்கியது ஒரு மூன்றெழுத்து மந்திரம்.
அது மட்டுமா?
ஒரு துருவத்தின் இரு வேறு துருவங்களான கோபால புரத்தையும், பழைய ஆலிவர் சாலையையும் ஒன்றாக்கியது அந்த மந்திரம்.
அந்த மந்திரம் ‘ரஜினி என்று சொல்லவும் வேண்டுமோ!
சப்பானியர்களே சாமியாடும்போது உள்ளூர் ரசிகர்கள் சும்மாயிருக்க முடியுமா?
என்னதான் பெரிய பதவியில் இருந்தாலும் அவர்களும் மனிதர்கள்தான். யாரோ ஒருத்தருக்கு ரசிகர்கள்தான்.
பதவி வரும், போகும். ரசிகர் பட்டமோ நிரந்தரம்.
அதனால்தான் வங்கக் கடலில் கொத்து கொத்தாக மீனவர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டபோது நகராத கால்கள் ‘குட்லக் பிரிவியூ தியேட்டருக்கு விரைந்தோடின.
‘ தூங்கவே நேரமில்லை என்றவர்கள் மூன்றரை மணி நேரம் ஒரு இருட்டுக் கொட்டகையில் தேவுடு காத்தார்கள் .
‘ஆகா…!’ என வியந்தார்கள்.
‘பிரமாண்டம்!’ என புகழ்ந்தார்கள்
.போஸ்டர் ஒட்டவில்லை. அது குனிந்து நிமிர முடியாத முதுமையால்.
பாலாபிஷேகம், பீர் அபிஷேகம் செய்யவில்லை. அது பகுத்தறிவுப் பாசறையிலிருந்து வந்து தொலைத்து விட்ட ஒரே காரணத்தால்.
மற்றபடி எல்லாம் இனிதே நடந்தேறின.
போணியாகாத பங்குகளை திடீரென்று அதிக விலைக்கு வாங்கி செயற்கையாக அதற்கு ஒரு விலை மதிப்பை உருவாக்கும் பங்குச் சந்தை சூதாடிகள் போல் தொலைக்காட்சி உரிமம் நான்கு கோடிக்கு வாங்கி சிவாஜியின் ‘கிரேடு உயர்த்தப்பட்டது.
பெட்டிக்கடை, டாஸ்மாக் இந்த இரண்டையும் தவிர அநேகமாக எல்லா இடங்களிலும் சிவாஜி.
ஊடக முதலாளிகள் ஊக வணிகர்களாக மாறினார்கள்.
‘படம் பார்க்க வர்றியா, இல்லியா? என ஒவ்வொரு வீட்டிலும் புகுந்து கழுத்தில் துண்டைப் போட்டு தியேட்டருக்கு இழுக்காததுதான் குறை.
முந்தானை முடிச்சைப் பார்த்து வீட்டைச் சுற்றி முருங்கை மரம் வளர்த்த அறிவாளிகளின் அடுத்த தலைமுறை இத்தனைக்குப் பிறகும் எப்படித் தாக்கு பிடிக்க முடியும்?
அப்பனின் சம்பளத்தையோ, ஆத்தாளின் தாலியையோ அறுத்துக்கொண்டு ஓடினார்கள்.
வியர்வையில் குளித்து, லத்தியால் அடி வாங்கி, வேட்டியைப் பறிகொடுத்து ‘வணக்கம் போட்ட பின் வெளியேறினார்கள்.
‘பத்திரிகையில ஆயிரம் எழுதுவான். என்ன விலைக்கும் டிக்கெட் விப்பான். நமக்குப் புத்தி வேணாமா…’ என்கின்றன நடுத்தர வர்க்கமும், அறிவு ஜீவிக் கும்பலும்.
வழிப்பறிக்காரனிடம் பணத்தைப் பறிகொடுத்தவனை குற்றவாளிபோல் விசாரிக்கும் போலீஸ்காரனாய் சாதாரண மக்கள்மீதே விரல் நீட்டுகின்றன.
புத்தி வேணும்தான்!
ஆனால், அது படம் பார்த்த இவனுக்கு மட்டுந்தானா?
எடுத்தவனுக்கில்லையா?
திருட்டு சிடி பார்ப்பது குற்றம்தான். ஆனாலும் தயாரித்தவனை மட்டுந்தானே போலீசு நோண்டி நொங்கெடுக்குது.
கள்ளச்சாராயம் குடித்தவன் ஆஸ்பத்திரிக்குப் போனால், அதை காய்ச்சி விற்றவன் ‘லாக்அப் போகிறானே !
ஆளுக்கொரு தண்டனை அறிவிக்க… இது என்ன நவீன மனுநீதியா?
அதிசயம்.
ஆனால் உண்மைதான்.
சினிமாக் கொட்டகைகளை கள்ளப்பணம் புழங்கும் சந்தைகளாக மாற்றிய ஒரு கும்பல் கள்ளப் பணம் ஒரு தேச விரோதச் செயல் என படமெடுத்திருக்கிறது.
திருடனாக இருந்த வால்மீகி இராமாயணம் எழுதியதைப் போல் என்றும் இதைச் சொல்லிவிட முடியாது.
வால்மீகி திருட்டிலிருந்து விடுபட்ட பின்பே கதை எழுதியதாக கதை.
இவர்களோ ‘தொழிலில் இருந்து கொண்டே அந்தத் தொழிலுக்கு எதிராக கதை எழுதுகிறார்கள்.
‘கள்ளப்பணம் வைத்திருக்கும் எவனும் அதை ஒழுங்காக கணக்குக் காட்டி ஒப்படைக்கச் சொன்னால் செய்ய மாட்டான்.கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்தால் தானே வெளியேவரும்’ என்ற ஷங்கரின் புரட்சிகரச் சிந்தனை நமக்கு புல்லரிப்பை ஏற்படுத்துகிறது
.‘பூர்ஷ்வா கும்பலுக்குள் இப்படியொரு பாட்டாளி வர்க்கச் சிந்தனையாளர்களா?
இந்தப் புல்லரிப்பையும் தாண்டி நமக்கு எழுகிறது வேறொரு கேள்வி.
“ முத்து படத்திற்குப் பின் ரஜினியிடமும், அந்நியனுக்குப் பின்ஷங்கரிடமும் கைப்பற்றப்பட்ட கோடிகள் வருமான வரி அதிகாரிகள் கேட்டவுடனேயே ஒத்துக் கொண்டு கொடுத்தவையா?
அல்லது, ‘கவனித்த பிறகு கக்கியவையா?
இல்லை, ‘சிவாஜி வருவது போல் டங்குவார் தெறிக்க கும்மாங்குத்து விழுந்த அதிர்ச்சியில் ஆடிட்டர்கள் ஆள்காட்டிகளாக மாறிப்போன அவலத்தினாலா?
எப்படி ஷங்கர்? எப்படி?
அமெரிக்காவில் மென்பொருள் துறையில் சம்பாதித்த இளைஞன் தமிழ்நாடு திரும்பி மருத்துவப் பல்கலைக்கழகத்தையும், பொறியியல் கல்லூரியையும் இலவசமாக நடத்த முயற்சிப்பது தான் ‘சிவாஜி படத்தின் கதை.
நிஜ வாழ்க்கையில் சம்பாதிப்பதை கல்யாண மண்டபமாகவும், நட்சத்திர விடுதிகளாகவும் முதலீடு செய்பவர்கள் சினிமாவில் மட்டும் கல்வி வள்ளலாக வேடம் கட்டும் முரண்பாடு ஒருபுறம் இருக்கட்டும். அமெரிக்காவில் கோடிகோடியாகச் சம்பாதித்தப் பணம் மட்டுமே பொறியியல், மருத்துவப் பல்கலைக் கழகங்களை உருவாக்கப் போதுமா?
வேலை நேரம் போக ஓய்ந்த நேரங்களில் அங்குள்ள வங்கிகளைக் கொள்ளையடிக்காமல் இது எப்படிச் சாத்தியமாகும்?
‘ஜென்டில்மேன் தொடங்கி ‘சிவாஜி வரை கல்வி என்றாலே பொறியியல், ஐ.ஐ.டி. என்று உயர்தர படிப்புகள் மட்டுமே இவர்கள் கண்ணில் தெரியும் மர்மம் என்ன?
ஓராசிரியர் பள்ளி, கரும்பலகை இல்லா பள்ளி, கட்டடமில்லாமல் மரத்தடியில் நடக்கும் பள்ளி இங்கெல்லாம் அமெரிக்க என்.ஆர்.ஐ.களின் கடைக்கண் பார்வை ஏன் பட மாட்டேன்கிறது?
பஞ்சாயத்துப் பள்ளியில் ரஜினியைப் படிக்க வைப்பது சாத்தியமில்லை என்றோ, விவரணப் படம் போலவோ மாறிவிடும் அபாயமிருக்கிறது என்றோ இவர்கள் கதைக்கலாம்.
உண்மைக் காரணம் அதுவல்ல.
‘அமெரிக்காவில் நம்மவர்களுக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு’, ‘நம்மவர்கள் அங்கே கணினி துறையில் கொடி கட்டிப் பறக்கிறார்கள்’ என்ற அதீதப் புளுகு மூட்டைகளின் பின்னாலிருக்கும் நிஜ உலகத்தைப் பலரும் பார்ப்பதில்லை.
தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி ஒருபுறம்; இந்தியர்களோடு ஒப்பிடுகையில் அமெரிக்கர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய ஐந்து மடங்கு, பத்து மடங்கு சம்பளம் இன்னொருபுறம். இந்த இரண்டுமே இங்குள்ளவர்களின் தேவையை அங்கு அதிகப்படுத்தியிருக்கிறது.
சுருக்கமாகச் சொன்னால் இங்கிருந்து அமெரிக்கா நோக்கிப் பறக்கும் ஒவ்வொரு கணினி புலியும் அங்குள்ள தொழிலாளிகளின் வயிற்றிலடிக்கும் கருங்காலிகளாகவே புறப்பட்டுப் போகிறார்கள்.
இப்படிப்பட்ட கருங்காலிகளை உருவாக்கி அனுப்பி வைக்கிற கங்காணிகள்தான் ஜேப்பியார், விசுவநாதன், ஏ.சி. சண்முகம், என்.ஆர்.ஐ. சிவாஜி போன்றோர்.
உலகின் மொத்த கணினி மென்பொருள் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு வெறும் இரண்டு சதவிகிதம் என்பதும், இன்னமும் அமெரிக்காவின் பங்கு எண்பத்தைந்து சதவிகிதத்திற்கு மேல் நீடிப்பதும் இந்த உண்மையை மேலும் புரிந்து கொள்ள உதவும்.
‘மேலும் சில ஐ.ஐ.டி.கள், அதில் மேலும் அதிக இடங்கள் இவையெல்லாம் நமது மத்திய மந்திரி கொடுத்த உத்தரவாதங்கள்.
இந்த உத்தர வாதங்கள் இவருக்கு ஓட்டு போட்ட நாட்டு மக்களுக்கு அல்ல;
விருந்தினராகவும் வியாபாரியாகவும் கொஞ்ச நாட்களுக்கு முன்னால் இங்கு வந்து போனாரே… பில்கேட்ஸ் என்பவர், அவரிடம்.
இப்போது புரிகிறதா? கோடிக்கணக்கில் சம்பாதித்த என்.ஆர்.ஐ. சிவாஜி எதற்காக இங்கே ஓடி வந்திருக்கிறார் என்பது.
பணமிருப்பவன்தான் படிக்க முடியும் என்ற நிலை தனியார் சுய நிதிக் கல்லூரிகளால் ஏற்பட்டது.
அதற்குத் தீர்வு அந்தக் கல்வி நிலையங்கள் அரசுடைமை ஆக்கப்படுவதில்தான் சாத்தியப்படுமே தவிர, இன்னொரு தனியார் அத்துறையில் நுழைவதால் பெரிதாக என்ன கிழித்து விட முடியும்?
அரசு நிறுவனங்களில் தரமில்லை என அவதூறுகளை அள்ளி வீசும் தனியார்மய தாசர்கள் பொறியியல், மருத்துவம் படிக்க தங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம், சென்னை மருத்துவக் கல்லூரி போன்ற ‘தரங்கெட்ட அரசுக் கல்லூரிகளை தேர்வு செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்களே… என்ன காரணம்?
ஆறரை கோடி மக்களைக் கொண்ட ஒரு தேசத்தில் என்.ஆர்.ஐ. சிவாஜியால் அதிகபட்சம் எத்தனை பேருக்கு, எத்தனை வருடங்களுக்கு இலவசக் கல்வி கொடுக்க முடியும்?
கொண்டு வந்த காசை எல்லாம் கட்டடங்களுக்கும், மாமூலுக்கும் செலவழித்தபின் பல்கலைக் கழகங்களை நடத்தவும், சம்பளம் கொடுக்கவும் நம்ம என்.ஆர்.ஐ. சிவாஜியிடம் ஏது துட்டு?
ஒன்று, துண்டேந்த வேண்டும்.
அதற்கு அவரது கவுரவம் இடம் கொடுக்காது.
அல்லது கல்லூரியின் பெயரோடு ஒட்டிக் கொண்டிருக்கும் ‘இலவசம் என்ற சொல்லை எடுத்து விடவேண்டும்.
எதைச் செய்வார்?கதையில் இப்படியொரு ‘லாஜிக் இடிப்பதை கவனிக்கவில்லையா ஷங்கர்?
நிச்சயம் கவனித்திருப்பார்.
இலவசக் கல்வி என்று ஆரம்பிக்கும் திட்டங்களெல்லாம் கடைசியில் பணம் பிடுங்கும் சுயநிதி கல்லூரி நிறுவனங்களாகத்தான் மாறும் என்பதால் அப்படியே விட்டிருப்பார்.
இப்படி முன் யோசனை கொஞ்சமும் கூட இல்லாத என்.ஆர்.ஐ. சிவாஜி பாதியிலேயே ‘கடை விரித்தேன்; காசில்லை, கட்டி விட்டேன் என பழைய கி.ஆ.பெ. விசுவநாதம் கட்சியை கலைத்துக் கொண்டு போனது போல் விட்டு விட்டு ஓடினால் கல்லூரிகளை எடுத்து நடத்த அரசுதானே வரவேண்டும்!
சர்வீஸ் மைன்ட்டுடன் பல்கலைக்கழகம் நடத்த வந்த என்.ஆர்.ஐ. சிவாஜியை அரசு அதிகாரிகள் அலைக்களிப்பதை, அவமானப்படுத்துவதை கல் நெஞ்சும் கரைய சித்தரிக்கும் ஷங்கர் சுஜாதா ரஜினி கூட்டணி தன் நாட்டுக்கு சேவை செய்து பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த வரும் பொறியாளர்களை, மருத்துவர்களை, மேதைகளை கொஞ்சம்கூட மதிக்காமல் நட்ட நடு சாலையில் வெயிலென்றும், மழையென்றும் பாராது மணிக்கணக்கில் நிறுத்தி அசிங்கப்படுத்துகிறதே அமெரிக்கத் தூதரகம்…
அதை அவமானமாக என்றேனும் எண்ணிப் பார்த்திருக்கிறார்களா?
‘கணினி மேதை என்கிற கருங்காலிகளை விட்டுத் தள்ளுங்கள். சக போட்டியாளர் கமல்ஹாசன், ஹாசன் என்ற முஸ்லீம் சாயல் கொண்ட பெயருக்காகவே நியூயார்க் விமான நிலையத்துக்குள் சுற்றி வளைக்கப்பட்டாரே!
தலைமுடி நீளமாக இருந்ததால் தீவிரவாதி என்ற சந்தேகத்தோடு விசா கேட்டுப் போன நடிகர் ஆர்யா விசாரிக்கப்பட்டாரே…!
ஒரு வசனமாகவேனும் இந்த இழிவை எடுக்கும் படங்களில் பதிவு செய்ய முடியுமா?
முடியாது .
நமக்கு ஆண்டையாகவும், அமெரிக்கனுக்கு அடிமையாகவும் இருக்கும் பார்ப்பன பார்ப்பனிய அடிவருடிக் கும்பல் நிச்சயமாக செய்யாது
.‘படத்தில் நல்ல விசயங்களே இல்லையா?’
நிறைய இருக்கிறது.
கே.ஆர். விஜயாவோடும், கே.பி. சுந்தராம்பாளோடும் ஜோடி போட வேண்டிய வயதிலுள்ளவர் தன் மகளை விட சின்னப் பெண்ணான ஸ்ரேயாவிடம் ‘சில்மிஷம் செய்திருப்பது.
‘இருபது வயது வாலிபனாக ரஜினி வருகிறாராமே?’
ஒரு சின்ன திருத்தம்.
இருபது வயது வாலிபனாக அல்ல, இருபது வயது குறைந்த ஒருவராக வருகிறார்.
அதாவது தாத்தா போலிருந்தவர் அப்பா மாதிரி இருக்கிறார்.
இப்படி மெனக்கெட்டதற்குப் பதில் கதாநாயகி ஸ்ரேயாவின் டோபாவில் கொஞ்சம் வெள்ளைச் சாயம் பூசியிருந்தால் செலவுக்குச் செலவும் மிச்சம், ஜோடிப் பொருத்தமும் ‘ஓஹோ என்றிருந்திருக்கும்.
தனது அடுத்த படத்தில் ரஜினி இந்த யோசனையை நடைமுறைப்படுத்துவதன் மூலம் செலவைக் குறைத்து தனது சம்பளத்தில் இன்னும் பல லட்சங்களைக் கூட்டலாம்.
‘பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா போன்றவர்களை ஒரு கோமாளிபோல் ஆக்கிவிட்டார்களே…’
உண்மையைச் சொன்னால் பட்டிமன்ற மேடைகளிலும் இவர்கள் கோமாளிகளாத்தான் இருக்கிறார்கள்.
இயக்குநர் ஷங்கர் இவர்கள் விசயத்தில் பாத்திரம் அறிந்துதான் பிச்சையிட்டிருக்கிறார்.
இதில் கவலைக்குரிய விசயம், நமது பேராசிரியப் பெருமக்களின் சினிமா மோகம் தொடர்ந்து அதிகரித்து வருவதுதான்.
லூஸ் மோகன், ஓமகுச்சி நரசிம்மன், குமரிமுத்து போன்ற மாபெரும் நகைச்சுவை நடிகர்கள் பேராசிரியர்களின் படையெடுப்பால் கதி கலங்கி போயிருப்பதாக நம்பகமானத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘படத்தில் ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் கிளைமேக்ஸ் ரொம்பப் புரட்சிகரமா இருப்பதை ஒத்துக்கிறீங்களா?’
கண்டிப்பாக ஒத்துக்கிட்டுத்தான் ஆகணும்.
நன்கொடையாவும், ஃபீசாவாகவும் பிடுங்கிச் சேர்த்தவனை அடித்து துவைத்து, அவன் பதுக்கி வைத்திருந்த பணத்தையெல்லாம் வெளியே பறக்க விடுகிறார் சிவாஜி.
படிக்கிற பசங்க அதை பொறுக்கி எடுத்துட்டு ‘நாம கொடுத்த பணமெல்லாம் இப்படியே திருப்பி நம்ம கிட்ட சேந்துடும் போல இருக்கே என்கிறார்கள்
படத்தில். என்னுடைய பக்கத்திலிருந்து படம் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் இப்படிச் சொன்னார்…
‘இப்பிடியெல்லாம் பொறுக்கித்தனமா படமெடுக்கிறவனை செருப்பாலடிச்சாலும் தப்பில்லைன்னு இவ்வளவு நேரமும் நெனச்சிட்டிருந்தேன். அது ரொம்பத் தப்புன்னு இப்ப புரியுது என்று சொன்னவர், ரஜினி, ஷங்கர், சுஜாதா போன்றோரின் வீட்டு முகவரிகளை ஒவ்வொருவரிடமும் விசாரித்துக் கொண்டிருந்தார்.
எதற்காம்?
என்ன செய்யணும்னு ஷங்கரே தெளிவா சொல்றபோது வெட்டியா செருப்பெல்லாம் எதுக்கு?
எப்படியோ நல்லது நடந்தால் சரி! சமூக விழிப்புணர்வு