kb
இயக்குனர் பள்ளம்.

“வடக்கால இருக்குற வாசப்படியை அப்பிடியே அலாக்காத் தூக்கி தெக்கால மாத்தி வச்சாப் போதும்….. அடுத்த அம்பானி நீதான்” என  டுபாக்கூர் விடும் வாஸ்து நிபுணன்களுக்கு எந்தவிதத்திலும் சளைத்தவர்களில்லை நமது மகாகனம் பொருந்திய மாட்சிமிகு நீதியரசர்கள்.

சமீபத்தில் இந்த நீதிமான்கள் ‘மடிசார் மாமி மதன மாமா’ பஞ்சாயத்தில் எடுத்து வைத்த கருத்துக்கள் கர்த்தரின் மலைப்பிரசங்கத்தையே தோற்கடித்துவிடக்கூடியவை.

கடந்த ரெண்டு மணி நேர இருட்டு ஆட்சியில் ‘அய்யன்’ கருணாநிதி தமிழ்நாட்டில் வெளியாகும் தமிழ் படங்களுக்குத் தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கென அறிவித்தார். ஒரு பொம்பளைப் பொறுக்கியின் சுயசரிதையை கிளுகிளுப்பேற்றிச் சொன்ன ‘நான் அவன் இல்லை’, முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகவும், சங்கப் பரிவாரங்களைத் தேசபக்தர்களாகவும் சித்தரித்த  ‘உன்னைப் போல் ஒருவன்’ போன்றவையெல்லாம் வரிவிலக்குப் பெற்று கல்லா கட்டின. ‘மாமனாரின் இன்பவெறி’, ‘அஞ்சரைக்குள்ள வண்டி’ படங்களெல்லாம் ரொம்ப நாளுக்கு முன்பே வந்துபோய்விட்டதால்,  நல்ல தமிழ்ப் பெயர் இருந்தும் வரிவிலக்குப் பெறும் பாக்கியம் இழந்தன.

அன்று ‘அய்யன்’ கருணாநிதி செய்ததை நையாண்டி செய்தவர்கள், இன்று மாண்புமிகு நீதிமான்கள் வழங்கிய தீர்ப்பை உச்சி முகர்ந்து வரவேற்பது வேடிக்கையாக அல்ல, வினோதமாக இருக்கிறது.

பணமா பாசமா, எதிர்நீச்சல், அன்புக் கரங்கள், பாசமலர்,தாய் சொல்லைத் தட்டாதே என்றெல்லாம்  கண்ணியமான தலைப்புகளில் 24 காரட் பரிசுத்தமான கதையம்சம் கொண்ட படங்கள் வந்து தமிழர்களின் கலாச்சாரம் கெட்டுப்போகாமல் காத்து வந்ததாகத் தீர்ப்பெழுதியிருக்கிறார்கள் மாண்புமிகுக்கள்.

உண்மைதானா அது?

“ஆசைப்பட்டதை அடைவதற்காக சமுதாயத்துக்கு எதிரான நடவடிக்கைகள், குற்றச்செயல்கள், ஒழுக்கக்கேடுகள், வன்முறைகள் போன்றவற்றைச் செய்வது தவறானதல்ல என்பது போன்ற கருத்துக்களை சினிமாக்கள் கூறுகின்றன. இது சட்டத்துக்குப் புறம்பானதாகும்.”

poster-big

இப்படிச் சொல்லிய நீதிதேவன்கள் மதன மாமாவை வெட்டி விட்டு, மடிசார் மாமியை அனுமதித்திருக்கிறார்கள். அதாவது ஆபாசம் தலைப்பில் மட்டும்தான்.   இதன்மூலம் அவர்கள் கருத்தை அவர்களே மறுக்கும் விநோதம் ஒருபுறம்;  ‘போக்கிரி’, ‘மங்காத்தா’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ போன்ற பொறுக்கித்தனமான பெயர்களை என்கவுண்டரில் போய்ச் சேர்ந்த வீரமணி, ஆசைத்தம்பி, கபிலன் போன்ற தமிழ் ரௌடிகளின்  பெயர்களாக மாற்றிவிட்டால் குழந்தை குட்டிகளோடு உட்காந்து பார்க்கலாம் என்று பொழிப்புரை இன்னொருபுறம். உள்ளடக்கத்தில் கவனம் செலுத்தாமல் உருவத்தைக் கொண்டாடுகிறார்களே பின் நவீனத்துவவாதிகள்….. அவர்களைப் போல.

சுருக்கமாகச் சொன்னால் வாய்க்குள்ளாற போறது நரகலாயிருந்தாலும் அத வச்சித் திங்குற பாத்திரம் மட்டும்  நல்ல பளபளப்பா, ‘விம்’ பவுடரப் போட்டுத் தொலக்கியிருக்கோணும்.

சில வருடங்களுக்கு முன் தணிக்கை செய்ய இலட்சக்கணக்கில் கையூட்டுப் பெற்றபோது கையும் களவுமாகப் பிடிபட்டார் ஒரு தணிக்கை அதிகாரி.

ஒரு படத்துக்கான செலவில் தணிக்கைக் குழு உறுப்பினர்களுக்கு எழுதப்படும் மொய்க் கணக்கை பிரபல இயக்குநரே பகிரங்கப்படுத்தினார்.

இப்படி ஒரு களவாணிக் கும்பல் கண்ணெதிரே ரவுண்டு கட்டி அடித்துக்கொண்டிருக்க ”தணிக்கைத் துறையின் செயல்பாடுகளில் சந்தேகம் வருகிறது” என எதுவுமே தெரியாத அப்பாவி செந்தில் போல் முகத்தை வைத்துக்கொண்டு அங்கலாய்க்கிறார்கள் நீதிதேவன்கள். என்ன கெரகமடா இது…?

“மனித உறவுகள், குடும்பத்தின் மதிப்பு, மூத்தவர்களை மதித்தல், சகோதர பாசம், தேசிய ஒற்றுமை போன்றவை பற்றிய கருத்துக்களை மனசாட்சியோடு அந்தக் காலப் படங்கள் வெளியிட்டன.”

இந்த நீதிமன்றப் பெருசுகள் விடும் பெருமூச்சில் எத்தனை விழுக்காடு உண்மை?தமிழ்ச் சினிமா இப்பதான் இப்படி நாறிப்போய் விட்டதா..?

எட்டி உதைத்தாலும் சுற்றிச் சுற்றி வரும் நாய்க்குட்டியாய் விசுவாசம் காட்டும் உறவு நிச்சயம் குடும்ப உறவாய் இருக்க முடியாது. அடிமைகள்- ஆண்டை உறவாகத்தான் இருக்கமுடியும். துளியும் சனநாயகமற்ற இந்த ஆணாதிக்க, பண்ணை மனோபாவம் கொண்ட பாத்திரங்களைத்தான் பீம்சிங், கே.எஸ். கோபாலகிருஷ்ணன் போன்றோர் நெஞ்சுருக ரீல் ரீலாக ஓட்டிக் காட்டினார்கள்.

அறுத்துக் கட்டுதல், விதவை மறுமணம் போன்றவை தென் மாவட்டத் தமிழர்களிடம் இயல்பான ஒன்றாக இருந்தபோது கணவனை இழந்த பெண்ணை மூளியாக்கி வீட்டுக்குள் முடக்கும் பார்ப்பனியக் கருத்தியலை தமிழர்களின் பண்பாடாக நீடிப்புச் செய்தார்கள். காட்சிகள் மூலமே கதையை நகர்த்திச் செல்லும் புதிய உத்தி கண்டுபிடித்த ஸ்ரீதர் கூட இதற்கு விதிவிலக்கில்லை.

‘பாசமலர்’ காட்டும் சகோதர பாசம் இப்போது இல்லை என்பது எந்த அளவுக்கு உண்மையோ….அந்த அளவுக்கு உண்மை அது அப்போதும் இல்லை என்பது.

இப்படத்தை இப்போது ரீமேக் செய்தால் சிவாஜியாக வடிவேலுவும், சாவித்திரியாக கோவை சரளாவும் நடிக்குமளவிற்கு எக்காலத்திற்கும் பொருந்தாத கோமாளிப் படைப்புகள் அவை.

“குற்றங்களைச் செய்யும் கதாநாயகர்கள் கடைசியில் தண்டனை பெறாமல் எளிதாகத் தப்பிவிடுவதுபோல் காட்டுவது இளைஞர்களின் மனதைக் கெடுக்கிறது.”

இந்தப் பொன்னான வரிகள் மங்காத்தாவுக்கும், பில்லாவுக்கும், போக்கிரிக்கும் மட்டும்தானா யுவர் ஹானர்?

அப்பனும், மகனும் சேர்ந்து கூட்டுக் களவாணிகளாக கண்ணில் படும் பெண்களையெல்லாம் தூக்கிக் கொண்டு போய் பாலியல் வல்லுறவு நிகழ்த்தும் படத்தின் பெயர் ‘எங்க ஊர் கண்ணகி’. சுத்தத் தமிழ்ப் பெயர். படம் வந்து கிட்டத்தட்ட வருடம் 25 கடந்துவிட்டது.

ஜெயகாந்தனின் ‘சில நேரங்களில் சில மனிதர்’களைப் பயன்படுத்தி தாயையும், மகளையும் ஒரே நேரத்தில் ‘வளைக்கும்’ வக்கிரப் பாத்திரப் படைப்பைக் கொண்டது சுத்த சுயம்புவான தமிழ்ப் பெயர் கொண்ட ‘அவள் ஒரு தொடர்கதை’  (ஜெ.கே.யின் புத்தகங்கள் இந்த மாதிரி சமாச்சாரங்களுக்கு ரொம்ப நல்லாவே பயன்படும்).இப்படம் வெளியாகி  ஆகிவிட்டது 40 வருடங்கள்.

கறுப்புக் கண்ணாடி போட்டுக்கிட்டு பெண்ணின் உடம்பை நிர்வாணமாக ரசிக்க வைத்த படத்தின் பெயர் ‘நெற்றிக்கண்’. எந்தக் கண் தெரியுமா? “உடம்பெல்லாம் கண்ணாக்கிச் சுட்டபோதிலும் குற்றம் குற்றமே” என்ற நக்கீரனை எரித்துப் பொசுக்கி பொற்றாமரைக் குளத்தில் வீழ்த்திய முக்கண்ணனாம் சிவனின் நெற்றிக்கண். இதற்கும் வயது 25.

மகள் ஐம்பதைக் கடந்த ஒரு அரைக்கிழடை விரும்ப, அவள் தாயோ அந்த ஐம்பதின் புத்திரனான இருபது வயது இளைஞனிடம் மையல் கொள்கிறாள். இது ‘அபூர்வராகங்கள்’.

Avaloruthodar

16 வயதுப் பெண்ணை 25 வயது இளைஞன் விரும்ப, அவளோ அந்த 25ன் 60 வயது அப்பனுக்கு மனைவியாகி காதலித்தவனை “மகனே” என அழைத்து நக்கல் பண்ணுகிறாள். இது ‘மூன்று முடிச்சு.’

இந்த இரண்டு வக்கிரங்களுக்கும் வயது 40க்கும் மேல்.

இவையெல்லாம் ‘பால்கே’ விருது பெற்ற பாலச்சந்தர் நல்ல தமிழ்ப் பெயர்களில் நமக்கு வழங்கிய நாலாந்தரக் கழிசடைகள்.

இந்த வக்கிரம் பிடித்த நாயகர்கள்-நாயகிகளுக்கு அதன் படைப்பாளிகள் படம் முடியும் நேரத்தில் என்ன தண்டனை அளித்தார்கள் என்பதை மாண்புமிகுக்களின் மனசாட்சியே அறியும்.

பாலியல் வல்லுறவு செய்தவனுக்கு அந்தப் பெண்ணைக் கட்டி வைப்பதையே அவனுக்கான தண்டனை என்று நம்மை நம்ப வைத்த அந்தக் காலத்துப் படங்களைவிட, அவன் ஆண்மையை அறுத்தெறிவதைத் தண்டனைத் தீர்ப்பாகச் சொன்ன இன்றைய சில படங்கள் கொஞ்சம் முற்போக்குதான்.

இன்னும் தமிழுக்கு எதிரான, தமிழர்களுக்கு எதிரான, தமிழ்வழிக் கல்விக்கு எதிரான, ஒடுக்கப்பட்ட- சிறுபான்மையினருக்கு எதிரான, இட ஒதுக்கீட்டுக்கு எதிரான  படங்களெல்லாம் சினிமா பேச ஆரம்பித்தபோதே வர ஆரம்பித்துவிட்டன.

ஒரு பொம்மைக்காக  வயதான பாட்டியைக் கொலை செய்த சிறுவன்,

ஒரு செல்போனுக்காக கூடவே விளையாடிகொண்டிருந்த சிறுவனை மறைவான இடத்திற்குத் தள்ளிக்கொண்டுபோய் கொன்ற சிறுவர்கள்,

பிளாக்பெர்ரி, ஐபோன், பிறந்தநாள் கொண்டாட்டம் போன்றவற்றிற்காக வழிப்பறியில் இறங்கும் மாணவர்கள்…

இவர்களுக்கெல்லாம் குற்றங்களைக் கற்றுக் கொடுக்கும்  குருகுலமாகத் திகழ்ந்தது தமிழ் சினிமா. ஆனால் குற்றச்சூழலை உருவாக்குகிறது நமது சமூகம்.குடிமக்களை நுகர்வோராக மாற்றிய உலகமயத்தால் கடற்கரையிலிருந்து மீனவர்களும், காடுகளிலிருந்து  பழங்குடிகளும், விவசாயிகளும் நகர்ப்புறங்களுக்குத் துரத்தப்பட்டு உதிரித் தொழிலாளிகளாக உருவெடுக்கிறார்கள். இருப்பவனிடமிருந்து அடித்துப் பிடுங்கும் சினிமா நாயகர்களை  இவர்கள் ஒரு கொண்டாட்ட  மனநிலையுடனே பார்ப்பார்கள்.

“தேன் எடுத்தவன் புறங்கையை நக்காமல் இருப்பானா?” என்று ஊழலை நியாயப்படுத்தியவர்களும், 2ஜி யில் ஒரு இலட்சத்து  எழுபத்தாறாயிரம் கோடி ஆட்டயப் போட்டவர்களும்,மணல் மாபியாக்களும், கிரானைட் கேடிகளும் இன்று தயாரிப்பாளர்கள்.

அண்டா குண்டானை வித்தும், ஆத்தாளின் தாலியை  அடகுவைத்தும் கல்வித்தந்தைகளின் காலடியில் நன்கொடையாகக் கொட்டிப் படித்தவர்கள் இயக்குநர்கள்.  இவர்களின் கூட்டு முயற்சியில் மாடர்ன் டைம்சும், பொடம்கின் போர்க்கப்பலுமா வெளிவரும்?

மீறி முயற்சிப்பவர்கள் கோடம்பாக்கத்திலிருந்துத் துரத்தப்படுவார்கள். கொள்கை கோட்பாடு என்று பேசுபவர்களோ ‘அக்ரகாரத்தில் கழுதை‘எடுத்த ஜான் ஆபிரகாமைப் போல் படத்தை எடுத்து  ஊர் ஊராகக் காட்டி துண்டேந்த வேண்டியதுதான்.