‘அஹம் பிரம்மாஸ்மி’ என்றால் என்ன?
‘நான் கடவுள்’ அல்லது ‘நானே கடவுள்’ என்று அர்த்தமாம்.
சமஸ்கிருதத்தில் சப் – டைட்டில் போட்டு பார்ப்பனர்களை கொட்டகைக்கு இழுத்த புண்ணியவான்கள் ஏனைய இந்திய மொழிகளிலும் ரூபாய் நோட்டில் போட்டிருப்பது போல் தெலுங்கு, கன்னடம் என வரிசையாகப் போட்டு விளக்கியிருந்தால் இன்னும் கொஞ்சம் கூட்டம் சேர்த்து நல்லா கல்லா கட்டியிருக்கலாம்.
‘தேவடியா மகன் புளுத்துவான்’ என வசனம் எழுதும் ஜெயமோகன் எப்படி ஒரு கடைந்தெடுத்த ஆர்.எஸ்.எஸ். காரனாக இருக்க முடியும்?
சம்சாரம் செத்துப் போனதால் அதிர்ச்சிக்குள்ளான பால் தாக்கரே வீட்டுக்குள்ளாற இருந்த அத்தனை சாமி படங்களையும் அடித்து உடைத்தாராம்.
அவர் இப்ப கறுப்பு சட்டை மாட்டிக்கிட்டு தெருத் தெருவா பகுத்தறிவுப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்னு நெனச்சா அது நம்ம அறியாமை.
‘மருதமலை முருகன் அருளால் எல்லாமே வெற்றி’ என படத்தைத் தொடங்கும் ஒரு சினிமா தயாரிப்பாளர், படம் டப்பாவுக்குள் சுருண்டு விட்டால், தான் கையெடுத்து கும்பிட்ட முருகனையே செருப்பாலடித்து, அவன் ஆத்தா பார்வதி தொடங்கி, சம்சாரம் வள்ளி வரைக்கும் வசவு விடுவாராம்.
அவரும் நாத்திகராகி விடவில்லை. ஒருவரி வசனத்திலோ, குறிப்பிட்ட ஒரு சம்பவத்தின் போது மட்டுமோ வெளிப்படும் கடவுள் மறுப்பு அற்ப ஆயுள் கொண்டது.
பகலில் அடித்து ராவில் கூடிக் கொள்ளும் வெட்கங்கெட்ட புருஷன் – பொஞ்சாதி உறவு போல பழைய கதைக்கே திரும்பி விடும் வாய்ப்புள்ளது. ஜெயமோகனின் கடவுள் எதிர்ப்பு லெட்சணமும் அதுதான்.
‘மாட்டுக்கறி தின்னாலும் மலையாளி மூளையோடத்தான் இருக்கிறான்’. இந்த வசனத்தில் ஜெயமோகன் மலையாளிகளை பாராட்டுகிறாரா – இழிவுபடுத்துகிறாரா?
சுய விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்.
தலித் மக்களும், பாய்களும் திங்குற ஒரு கறியை தன் இனத்தானாகிய மலையாளி சப்புக் கொட்டித் தின்பதை ஒரு சுயம் சேவக்கால் எப்படிச் சகிக்க முடியும்?
அதனால்தான் மலையாளியின் மூளைக்குள் இருப்பதை பாராட்டும்போதே, இரைப்பைக்குள் போய் விழுவதையும் நோண்டி ஒரு பிடி பிடிக்கிறார்.
‘மாட்டுக்கறி தின்னாலும் மலையாளிகள் மேன்மக்களே!’ ஜெயமோகன் தமிழர்களுக்குச் சொல்ல விரும்பும் சேதி அதுவே.
நான் கடவுளில் வரும் பிச்சைக்காரச் சிறுவன் அம்பானியைப் பற்றி எப்படி அறிவான்?
அறிய மாட்டான்.
மட்டுமல்ல, வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்பாக மடை மாற்றி 1200 கோடி சுருட்டி, வெறும் 500 கோடிகளை மட்டுமே தண்டம் கட்டிய கதையையும் அவன் அறிய மாட்டான்.
ஆனால், கதை எழுதிய ஜெயமோகன் அனைத்தும் அறிவார். அனைத்தையும் அறிந்தும் ‘அவரு செல்லு விக்கிறவரு’ என சாதாரண ஒரு புதுப்பேட்டை காயலாங்கடை வியாபாரியைப் போல் மூடி மறைப்பதில்தான் ஜெயமோகன் என்ற இலக்கியவாதியின் சாமர்த்தியம் விளங்குகிறது.
முதல் தேதி சம்பளம் வாங்குவது அரசிடம்; முப்பது நாளும் சேவகம் செய்வது அம்பானியிடம்!
அரசு வேலையிலிருக்கும் இலக்கிய கர்த்தாக்கள் நல்லாதான் பொழைக்கிறாங்க.