-
ஜெயமோகன் & பாலா கோஷ்டியின் கின்னஸ் சாதனை
உளறலும், திமிரும் சரிவிகிதத்தில் கலந்து வந்தால் தமிழ்ச் சினிமாவில் அதற்குப் பெயர் ‘பஞ்ச் டயலாக்’. சூப்பர் ஸ்டார் ஆரம்பித்து வைத்த இந்தக் கிறுக்குத்தனம் நம்ம இலக்கிய ‘மாமேதை’ ஜெய மோகன் வரைக்கும் வந்தே விட்டது.
வெண்டக்காயை வெளக்கெண்ணெயில் குழப்பி எடுத்த கதையா வளவளா எழுத்துக்களை வார்த்தைகளாக வடிக்கும் அண்ணன் ‘ஜெ.மோ’ சினிமா என்பதும் சொந்தச் சரக்கு வேலைக்காகாது என்று மணிரத்னம் ஸ்டைலில் வார்த்தைகளை இடம் வலமாக, வலம் இடமாக ஒடித்து, கடித்து, சப்பித் துப்பியிருக்கிறார்.
சும்மா சொல்லக்கூடாது. இடத்துக்கு ஏத்த வேஷம் கட்டுவதில் கில்லாடிதான் நம்மாளு. ஆனால் நான் கடவுளில் ‘ஜெ.மோ’வின் உரை வீச்சு இருக்கிறதே… ‘என்னமோ உளறிக்கிட்டுப் போறான்’ என்று சும்ம விட்டுவிட முடியாத விஷமத்தனம் தோய்ந்தவை.
சாம்பிளுக்கு ரெண்டு வரிகளைப் பார்ப்போம்:
‘வாழக் கூடாதவர்களுக்கு நான் தரும் தண்டனை மரணம்’.
‘வாழ இயலாதவர்களுக்கு நான் தரும் வரம் மரணம்’.
வாழக் கூடாதவர்கள் என்றால் யாரு?
ராஜபக்சே, சோனியா, சுப்பிரமணியம் சாமி வகையறா என நினைத்தால், அது நினைத்தவர்களோட கேணத்தனம்.
கை, கால் முடமானவர்களை, குருடர்களை வைத்துப் பிச்சையெடுத்துத் தின்கிறானே… அவன்!
அஞ்சு பைசா திருடியவனை எண்ணெய்க் கொப்பறைக்குள் தூக்கிப் போட்ட ‘அந்நியன்’ உங்க ஞாபகத்திற்கு வருகிறானா?
நிச்சயம் வருவான்.
அவனுடன் நாகர்கோவில் நகர தெரு வீதி ஒன்றில் தள்ளுவண்டியில் நவாப்பழம் விற்றவனை சர்வதேச அளவுக்குச் சுரண்டல்காரனாகச் சித்தரித்து எழுதிய ஜெயமோகனும் நினைவுக்கு வர வேண்டும்.
ஆக, சரக்கு நம்மாளோட சொந்தச் சரக்குதான். கண்டிப்பாக ஷங்கர் – சுஜாதா கூட்டணியிடமிருந்து உருவவில்லை.
அந்நியனுக்கு கருட புராணம்.
கடவுளுக்கு ஏழாவது உலகம்.
முடவனை, குருடனை வைத்துப் பிச்சையெடுப்பவன் சந்தேகமின்றி சமூகக் குற்றமிழைப்பவன்தான். அவனுக்கே ‘இம்மாம் பெரிய…’ தண்டனை நியாயம்தான் என்றால் கை, காலை முடமாக்கி பிச்சையெடுக்கத் துரத்துபவனுக்கு?
நல்லாயிருந்த உடம்பை சர்க்கசில் காட்டும் ஒரு வினோதப் பிராணி போலாக்கி இப்போது மட்டுமல்ல, இனி வரும் தலைமுறைக்கும் பிச்சையெடுக்க விட்டிருப்பவனுக்கு…?
1984 டிசம்பர் மூன்று இரவில் விஷ வாயுவை திறந்துவிட்டு பல்லாயிரம் பேரைக் கொன்றதோடு சில லட்சம் பேரை ஊனமாக்கி போபால் நகரத் தெருக்களில் பிச்சையெடுக்க வைத்தானே… யூனியன் கார்பைடு ஆன்டர்சன்! அவனைத்தான் சொல்கிறேன்.
அவனுக்கு என்ன தண்டனை?
போபால் காசிக்கு ரொம்பப் பக்கம்தான். தண்டனையை முடித்து விட்டு, பொழுது சாய்வதற்குள் சுடுகாட்டுக்குத் திரும்பி விடும் தூரம்தான்.
‘ஆன்டர்சன் தப்பியோடிவிட்டான்… என்ன பண்ண முடியும்?’ என்று கையைப் பிசைய வேணாம். அவனிடம் பொறுக்கித் தின்ற கும்பல் இப்போதும் அங்குதான் இருக்கிறது!
அகோரி ருத்ரனை அங்கே அனுப்பி வைக்கலாமே!
அவன் மட்டுமா…
நூறு கோடி இந்தியர்களையும் காட்டி உலக வங்கியில் தொடர்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருக்கிறாரே மன்மோகன்!
டெல்லிக்குப் போய் ஒரு ‘ருத்ர தாண்டவம்’ ஆடிப் பார்த்திருக்கலாமே பாலா?
ஆடினால் டவுசர் கிழிஞ்சி தொங்கிடும்.
வாழக் கூடாதவர்களை வகைப்படுத்திய லெட்சணம்தான் இப்படி…! வாழ முடியாதவர்களையாவது சரியாக அடையாளம் காட்டியிருக்கிறார்களா என்று பார்த்தால்…
ரெண்டு கண்ணும் தெரியாத குருட்டு பிச்சைக்காரி – அல்லது அவளைப் போன்றவர்கள் வாழக் கூடாதவர்களாம்!
அதாவது, உழைக்க வலுவற்றவர்களை, ஊனமுற்றவர்களை கருணைக் கொலை செய்துவிடப் பரிந்துரைக்கிறார்கள் இந்தக் காத்தி தேசத்துப் புத்திரர்கள். அதிர்ச்சியான செய்திகளை காட்சிப்படுத்துவதன் மூலமே தங்களை வித்தியாசமான படைப்பாளிகளாகக் காட்டிக்கொண்டு வரும் இலக்கியவாதி ஜெயமோகனையும், இயக்குனர் பாலாவையும் பார்த்து நெஞ்சில் ஈரமுள்ளவர் யாரும் ‘அடப் பாவிகளா’ என கத்தாமல் இருக்க முடியாது.
அறுபது லட்சம் யூதர்களைக் கொன்று குவித்த ஜெர்மன் நாஜிகள், அத்துடன் நிற்காமல் ஒரு லட்சம் உடல் ஊனமுற்றவர்களையும், மனநோயாளிகளையும் – அவர்கள் ஜெர்மானியராகவே இருந்த போதும் விஷ வாயுவைச் செலுத்திச் சாகடித்தார்கள் இரண்டாம் உலகப் போரில்!
‘இனத்தூய்மை’ இதற்கு காரணமாகச் சொல்லப்பட்டாலும், வேண்டாத சுமை ஒன்று இறக்கி வைக்கப்பட்டது என்றே அவர்கள் நிம்மதி அடைந்தார்கள்.
‘வலுத்தவன் மட்டுமே வாழ வேண்டும்’ என்ற இந்த ஆரிய வக்கிரத்தைத்தான் ‘நான் கடவுள்’ வழியாக நம்மிடம் இப்போது சுற்றுக்கு விட்டிருக்கிறார்கள்.
அய்யா படைப்பாளிகளே, இந்த வலுத்தவன் தியரியை நடைமுறைப்படுத்தியிருந்தால் – ஒரு பேச்சுக்குச் சொல்கிறேன்… நீங்க ரெண்டு பேரும் புதைக்கப்பட்ட இடத்தில் இந்நேரம் புல்லு முளைத்து, பெரிய விருட்சமே வளர்ந்திருக்கும்.
“என்னடா படம் எடுத்திருக்கான்?” என காறித் துப்பியவர்களும் வியக்கும் விசயமொன்று படத்தில் இருக்கு. –
‘இதுவரை நாம் பார்த்தறியாத, பார்க்க மறுத்த பிச்சைக்காரர்களின் இன்னொரு பக்கத்தை நம்ம செவுளில் அறைந்தது போல் சொல்லியிருக்கிறார் பாலா’.
உண்மைதானா இது?
ஏ.எஸ். பிரகாசத்தின் ‘எச்சில் இரவுகள்’, துரையின் ‘பசி’, இன்னும் பெயர் தெரியாத எத்தனையோ படங்களில் கவுண்டமணி – செந்தில் சித்தரித்த பிச்சைக்காரர்களிலிருந்து பாலாவின் உலகம் எப்படி, எங்கே வேறுபடுகின்றது?
வேறுபாடு கண்டறிய இந்தக் கருமத்தை மீண்டும் ஒருமுறை பார்த்துத் தொலைக்க வேண்டியதில்லை. இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனங்களை வழிமறித்து “ஐயா, சாமீ…’ என்று தட்டை நம் முகத்திற்கு நேராக நீட்டுகிறார்களே… நகரங்களின் முக்கியச் சாலை சந்திப்புகளில்…
பாவத்தை தொலைத்து பரகதி சேர்ப்பதற்காகவே இருக்கும் நமது அத்தனை திவ்விய ஷேத்திரங்கள் ஒவ்வொன்றின் வழிநெடுகிலும் ஒரு ஓரமாக அமர்ந்து நமது கருணையின் அளவைப் பரிசோதிக்க அபயக் குரல் எழுப்புகிறார்களே…
பிச்சைக்காரர்கள்!
‘வேண்டாம்பா இந்தப் பொழப்பு! என்னோட வந்தா நல்ல ஒரு வேலையில் சேர்த்து விடுறேன்’ என்று காசுக்குப் பதில் கனிவை நீட்டி அவர்களிடம் உரையாடிப் பாருங்கள்!
கையை நோக்கி நீண்ட பிச்சைப் பாத்திரம் அப்படியே ஓங்கி உங்கள் தலையில் ‘ணங்’ என ஓர் அடி அடிக்கும்.
ஆம், அவர்கள் பிச்சையெடுக்க மட்டுமல்ல, பொறுக்கித்தனத்திற்கும் பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறார்கள். பேச்சில் வந்து விழும் வக்கிரமும், வசவும் பாலா காட்டிய உலகத்தைவிட பல மடங்கு அதிர்ச்சியை உங்களுக்கு அளிக்கும்.
உதிரித் தொழிலாளிகள், பண்ணை அடிமைகளிடமிருந்து பகடியாக வெளிப்படும் குமுறலை இவர்களிடம் கேட்க முடியாது. அது பாலா – ஜெ.மோ கற்பனையில் மட்டுமே சாத்தியம்.
சுருக்கமாகச் சொன்னால் செய்யும் ‘தொழிலில்’ இவர்கள் ராஜாவை மிஞ்சிய ராஜவிசுவாசிகள்.
இந்த ‘அனுபவம்’ உங்களுக்குக் கிடைத்தால் பாலா-ஜெ.மோ கூட்டு சேர்ந்து உருவாக்கி உலவவிட்டிருக்கும் கடவுளை விட, ஏனையோரின் முந்தையப் படங்கள் எதார்த்தத்திற்கு கொஞ்சம் நெருங்கிச் சென்றிருப்பது புரியும்.
பாலா – ஜெயமோகன் கும்பல் கட்டமைத்த பிச்சைக்கார உலகிற்குள் நுழைந்து மயிர் சிலிர்த்து, மேனி நடுங்கிய ரசிக சிகாமணிகளுக்கு மேலுமொரு கேள்வி.
பிச்சைக்காரர்களின் மறுபக்கம் ஒருபுறம் கிடக்கட்டும்.
கங்கை நதிக்கரை ஓரத்து காசி நகரின் ‘அகோரிகள்’ எனப்படும் சுடுகாட்டுச் சாமிகளின் பக்கத்தையாவது சரியாக காட்டியிருக்கிறார்களா?
கங்கை நதி நீரில் மிதந்து வரும் மனித உடலை இழுத்தெடுத்து அதை ‘சகல மரியாதைகளுடன்’ கிடத்தி, பிணத்தின் மேலேறி ஆசனம் போட்டு ‘ஓம் சிவாய நமஹ’ என்று தியானம் (என்ன எளவோ) செய்பவர்களாக… புஷ்டியான பிணமென்றால் கைகளை வெட்டி சிக்கன் லெக் பீசைக் கடிப்பதுபோல் நரமாமிசம் தின்பவர்களாக…
பிணம் பெண்ணாக இருந்துவிட்டால் அதோடு புணர்ச்சி செய்யக்கூடியவர்களாக…
அகோரிகளின் மறுபக்கம் அல்ல, மொத்தப் பக்கமும் இதுதான்.
இதில் எதை உங்களுக்குக் காட்டினார் பாலா?
நல்ல படைப்பாளி அவன் அளித்த படைப்புகளால் மட்டுமல்ல, எடுக்க மறுத்த, மறந்த படைப்புகளாலும்தான் அறியப்பட வேண்டும்.
சமூக அக்கறை கொண்ட படைப்பாளிகளுள் பலரும் அகோரிகள் என்கிற இந்த மனநோயாளிகளின் காட்டுமிராண்டித்தனத்தை அப்பட்டமாகத் தோலுரிக்கும் குறும்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளார்கள்.
ஆனால், பாலா என்ன செய்திருக்கிறார்?
திகார் சிறையின் செல்களுக்குள் தனித்தனியே கொண்டுபோய் அடைக்கப்பட வேண்டிய அகோரிகளை, கலியை வேரறுக்க வந்த கிருஷ்ண பரமாத்மாவாக தமிழகத்திற்கு கூட்டி வந்திருக்கிறார்.
“ஓடிப் போங்கடா காட்டுமிராண்டிப் பயலுவளா?” என கல்லெடுத்து வீசி விரட்டப்பட வேண்டியவர்களை கைதட்டி ரசிக்க வைத்திருக்கிறார்.
சமூகம் குறித்து சரியான புரிதலுள்ளவர்கள் என நம்பப்படும் சில அறிவுஜீவிகள்கூட இந்த ரசனைக் கெட்ட கும்பலுக்குள் சிக்கியிருப்பது வேடிக்கையல்ல, வினோதமே.
தீபா மேத்தா என்று ஒரு சினிமா படைப்பாளி.
எல்லோருக்கும் தெரிந்தவர்தான். அவரும் கேமராவோடு இதே காசிக்குதான் போனார்.
எடுத்ததும் இதே வணிக சினிமாதான். அவர் கண்ணில் மட்டும் கைவிடப்பட்டு, அபலைகளாக துரத்தப்பட்ட விதவைப் பெண்கள் பட்டது எப்படி?
வங்கத்திலிருந்தும் ஒருத்தர் காசிக்குப் போனார்.
படமெடுக்க அல்ல, பாவம் தொலைக்க! ‘புனித ஜலம்’ என்று வாய்க்குள் ஊற்றும் கங்கைத் தண்ணி எவ்வளவு அசுத்தமானது, கேடு கெட்டது என்பதை அங்கே கண்டவர், சென்ற வேலையை போட்டு விட்டு ஒரு குறும்படம் எடுத்து, புனிதத்தின் யோக்கியதையை ஊர் ஊராகக் காட்டிக் கொண்டிருக்கிறார்.
இப்போது சொல்லுங்கள்… இவர்களில் யார் உண்மையான படைப்பாளி?
‘கடவுளை’ கேமராவுக்குள் அடக்க மூணு வருசம் ஆச்சுதாம்.
சிலை வடிக்க மூணு வருசம் எடுத்துக் கொள்ளலாம்.
வெறும் அம்மி கொத்த எதுக்கு மூணு வருசம்?