திஸ்மாஸ் டி செல்வா  

   

  

hand.jpg

 

ரொம்ப நாளைக்கப்புறம் அவனைப் பார்த்தேன்.

ஜனநாயகத் தூண்களை அசைத்துப் பார்க்காதே

பத்திரிகைச் சுதந்திரத்தை குழிதோண்டிப் புதைக்க முற்படும் மு.க. அழகிரியை அரசே உடனே கைது செ

ஒருவர் மைக்கில் ஓங்கிக் குரல் கொடுக்க நம்மாளு பதிலுக்கு கைது செய் என்று முஷ்டியை மடக்கி, பின்பு உயர்த்தி கத்திக் கொண்டிருந்தான்.

மைக்கைப் பிடித்திருந்தவர் கலாநிதி மாறனும் இல்லை; இவன் தினகரன் ஊழியனுமில்லை.

 வேற யாரு?

யாரு, நம்ம சி.பி.எம்.முங்கதான்.

 ரெண்டுல ஒண்ணு பாக்காம விடப் போறதில்லை என முண்டா தட்டுன மொதலாளியோ, அழகிரிக்கு எதிராக ஆதரவு திரட்ட ஜெர்மனிக்குப் போயிட்டாரு.

குட்டி மொதலாளி ஊட்டியில.

 பத்திரிகை வந்தா அடியாளுங்க அடிக்கிறானுங்க; வரலேன்னா மொதலாளி வயித்துல அடிப்பான்

கடமையுணர்ச்சியோட தினகரன் ஊழியருங்க பத்திரிகை காம்பவுண்டுக்குள்ள…

கோர்ப்பச்சேவுக்கு காய்ச்சல் வந்தா இங்கே போத்திப் படுத்துக் கொள்பவர்கள் உள்ளூரில், அதுவும் தன் கண் எதிரில் நடக்கும் அநீதி கண்டு சும்மா இருக்க முடியுமா?

நம்மாளு இருக்கானே… கைதட்டிக் கூப்பிட்டாலே வந்து விடுவான்தான். பாவம், அவ்வளவு கஷ்டப்பட்டுச் சேத்தக் கூட்டத்துல பாதி காணாமப் போன மாதிரியாயிடுமேன்னு கொஞ்ச நேரம் அமைதியா இருந்தேன்

.மைக்கை பைக்குள் போட்டு, கொடியைச் சுருட்டி அக்குளில் இடுக்கியபடி போராளிகள்புறப்படத் தயாரானபோது பின்னால் போய் அவன் தோளைத் தட்டினேன்.

அடியாட்கள்தான் பழையபடி வந்துவிட்டார்களோ என திடுக்கிட்டபடி ஓரடி முன்னால் நகர்ந்தவன் எப்படியோ கொஞ்சம் துணிச்சலை வரவழைத்துக்கொண்டு திரும்பிப் பார்த்தான்.

 குலுக்கிய உண்டியலில் ஐநூறு ரூபா விழுந்ததை கண்டவன்போல என்னைப் பார்த்ததும் ஒரு சிரிப்பு.

டீயெல்லாம் குடித்து ஆசுவாசப்படுத்திய பின்னும் அழகிரிக்கு எதிரான ஆவேசம் கொஞ்சம் கூட தணியாமல் இருந்தான் நம்ம காம்ரேடு
.
சும்மா சொல்லக்கூடாது. வழக்கமா நீங்க தொழிலாளிகளுக்காக போராடறதை விட மொதலாளிமாருங்களுக்காக நீங்க களம் இறங்குறப்போ காட்டுற உணர்ச்சியும், வேகமும் கொஞ்சம் கூடுதல்தானப்பா.

காம்ரேடின் தோள் தட்டி பாராட்டினேன்

. இதப் பாரு… நாங்க எத செஞ்சாலும் நொள்ள சொல்றதே உனக்கு வேலையா போச்சு. இப்ப நாங்க போராடினது மொதலாளிக்கில்ல. அநியாயமா உசுர விட்ட மூணு தொழிலாளிகளுக்குத்தான்.

சிக்கல்னு வந்தா தொழிலாளிகளை முன்னால கொண்டு நிறுத்தறுதுதான் இந்த முதலாளிகளோட தந்திரம்னு நேத்தி வரைக்கும் பேசி பொளந்து கட்டுனவங்களாச்சேப்பா நீங்க. இப்ப எப்படி இத முதலாளியோட பிரச்சனை இல்ல என்கிறீங்க?

 இதே தினகரன்ல கடந்த ஒரு வருசத்துல மட்டும் நூத்துக் கணக்கானவங்கள எந்த முன்னறிவிப்பும் இல்லாம நாளையிலேருந்து வேலைக்கு வர வேணாமுன்னு தொரத்தி தெருவுக்கு விட்டானுங்க. அப்ப எங்கப் போச்சு உங்க வர்க்கப் பாசம்?

 கூட்டணி தர்மத்துக்கு கட்டுப்பட்டு அமைதி காத்தீங்களா?”

இது விதண்டாவாதம். பச்சையா அராஜகத்துக்கு துணை போறது. இந்தாளுக்கும், அந்தாளுக்கும் பிரச்சனையின்னா அத அவுங்க குடும்பத்துக்குள்ளதானே பேசித் தீத்துக்கணும். அது விட்டுப்புட்டு சும்மா சம்பளத்துக்கு வேலை பாத்தவனுங்களை கொல்றதை நியாயப்படுத்துறியா?”

 கண்டிப்பா நியாயப்படுத்த முடியாதுதான். தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும், முதலமைச்சரின் வீட்டிலிருந்தாலும் கடுமையான தண்டனைக்கு உட்பட வேண்டியவர்கள்தான்.  

ஆனா, பங்காளிங்க சண்டையில எப்பவுமே பஞ்சாயத்துப் பண்ணப் போறவன் மாட்டி ஒதபடுவது வழக்கம்தானே.

அந்தக் கதைதான் இங்கேயும் நடந்து போச்சு.

சரி, அந்தாளுக்கும், இந்தாளுக்கும் பிரச்சனையின்னு சொன்னியே…எந்த ஆளுக்கும் எந்த ஆளுக்கும், என்ன பிரச்சனை?‘

எதுவுமே தெரியாத மாதிரி என் வாயைக் கிளர்ற? கருணாநிதியோட அரசியல் வாரிசு யாருன்னு தினகரன் பத்திரிகையும், உலகத்துலேயே நம்பர் ஒன் கருத்துக் கணிப்பு நிறுவனம் ஏ.சி. நில்சன் நிறுவனமும் சேர்ந்து ஒரு கருத்துக் கணிப்பு நடத்துனாங்களாம்…

கொஞ்சம் நிறுத்து… ஏ.சி. நில்சன் நம்பர் ஒன் கருத்துக் கணிப்பு நிறுவனம்னு சொல்றியே. மத்தவங்களுக்கு இது கணிப்பு நடத்துற மாதிரி, இவுங்களுக்கும் யாராவது கருத்துக் கணிப்பு நடத்தி இந்த நிறுவனம்தான் நம்பர் ஒன் நிறுவனம்னு அறிவிச்சாங்களா?”

அட என்னப்பா நீ… ஒரு வரி பேசவுடமாட்டேன்கிற? அவுங்க சொல்றத நான் சொல்றேன். கருணாநிதியோட வாரிசுன்னு அவரோட சின்னப்புள்ள ஸ்டாலினுக்கு எழுபது சதவீதமும், பெரியபுள்ள அழகிரிக்கு ரெண்டு சதவீதமுன்னும் கணிப்பு முடிவைப் போட்டதுக்குத்தான் இத்தனை அட்டூழியமும்…

அடேங்கப்பா… சோத்துக்குள்ள பூசணிக்காயை ஒளிச்சு வைக்கிறதுன்னு சொல்றாங்களே, சத்தியமா அது இதுதாண்டா.

ஸ்டாலினுக்கு எழுபது, அழகிரிக்கு ரெண்டு போட்டதுதான் இந்தப் பிரச்சனைக்குக் காரணமா, இல்ல, ரெண்டு பேருக்கும் இடையில மற்றவர்கள் யாரோ ஒருத்தருக்கு இருபது சதவிகிதம் மட்டும்தான் காரணமா? உண்மையைச் சொல்லு

‘‘ என்னப்பா நீ அவ்ளோ பெரிய கட்சியில சி.எம். பதவிக்கு வேற ஆளா இல்ல? அன்பழகன், மாதிரி எத்தினி பேரு இருக்குறாங்க?’

யாரு அன்பழகனா? அவரு கருணாநிதியை விடவும் வயசானவருப்பா? அவரு வாரிசா?

 மவனே… இது மட்டும் அன்பழகன் காதுல விழுந்துடுச்சுன்னு வையி… இருக்குற சீட்டுல இருந்து என்னைக் கிளப்பி விடுறதுக்கு இப்பிடி எத்தினி பேருடா கிளம்பியிருக்கீங்கன்னு சண்டைக்கு வந்துடப் போறாரு

அப்ப மத்தவங்க யாரு?’

தயாநிதி மாறன்தான்.

ஒரே மாசத்துல எம்.பி.யாகி, கேபினட் மந்திரியானாரு தயாநிதி. ஆனா, அதுக்கப்புறம் மூணு வருசமா எந்த வளர்ச்சியும் இல்ல.

 ஒரு முதல்வர், அதுவுமில்லேனா துணை முதல்வர்… இப்படி எந்த வளர்ச்சியும் இல்லேனா மனுசன் டென்ஷனாக மாட்டாரா?

அதுதான், அந்த டென்சன் பண்ணுன வேலைதான் இந்த கணிப்புச் சமாச்சாரம்.

அவரு டென்சனை விட்டுத்தள்ளு. ஆயிரந்தான் இருந்தாலும் பத்திரிகை நம்ம ஜனநாயகத்தோட தூண்களில் ஒண்ணு. அவுங்க எழுதுறதுல மாறுபட்ட கருத்திருந்தா அத கருத்தால எதிர்க்கிறதுதானே முறை. இப்பிடி அரிவாளைக் தூக்குறது என்ன நியாயம்?”

என்னது ஜனநாயகத் தூணா?”

ஆமா… இந்திய ஜனநாயகத்தைத் தாங்குற நாலு தூண்களில் பத்திரிகைத் துறையும் ஒண்ணுதானே?’

அப்படிப்போடு அரிவாள…

 வடிவேலு காமெடி ஒண்ணு அடிக்கடி டிவியில போடறான்… போய் மொதல்ல அதப்பாரு.  

ஊரிலுள்ள ரவுடிகளையெல்லாம் போலீசுகாரன் புடுச்சுட்டுப் போவான். உடனே வடிவேலுவும் ஓடிப்போய் போலீஸ் வண்டியில ஏறி நானும் ரவுடிதாம்பா… என்னையும் அரஸ்ட் பண்ணி கொண்டு போ… இல்லேன்னா வெளில ரொம்ப அசிங்கமாப் போவும் கெஞ்சுவாரு.

 நீ ரவுடி கிடையாது போலிசு சொன்னாலும் கேக்காம வண்டியில ஏறிப்பாரு.

 இப்ப பத்திரிகைகாரனுங்க தன்னை ஜனநாயகத்தோட ஒரு தூணுன்னு தம்பட்டம் அடிக்கிறதும் அந்த வடிவேலு கதை கணக்காதான் இருக்கு.

 இவங்க ஜனநாயகத்தைத் தாங்குன லட்சணம்தான் எழுபத்தஞ்சுல அன்னை இந்திரா எமர்ஜென்சி பேரில் ஜனநாயகத்துக்கு ஆப்படிச்சப்பவே அம்பலமாயிடுச்சே…

அரசாங்கத்துல காட்டி ஒப்புதல் வாங்கினதுக்குப்புறம்தான் பத்திரிகை அடிச்சு வெளியே அனுப்பனும்னு அன்னை ஆணையிட்டப்ப, கட்டளைக்கு அடிபணிந்தவர்கள்தான் இந்த ஜனநாயகக் காவலனுங்க.

 குஜராத்தில் கோத்ரா ரயில் விபத்தை, ரயில் எரிப்பாகச் சித்தரித்து முசுலீம்களுக்கு எதிராக கலவரத்தைத் தூண்டின பரிவாரங்களுக்குச் சமமான பங்கு பத்திரிகைகளுக்கு உண்டு.

அகில இந்திய பத்திரிகை கவுன்சில் கண்டனம் தெரிவிக்கும் அளவுக்கு இருந்தது இவர்களின் நேர்மை.

கரசேவகர்களின் சமையலால்தான் ரயில் எரிந்தது என லாலு பிரசாத் அமைத்த கமிசன் கண்டுபிடித்த உண்மை இவர்கள் முதுகில் ஓங்கி அறைந்தபோது, இவர்களிடமிருந்து வெளிப்பட்டது மவுனம் மட்டுமே.

காந்தியை ஒரு பார்ப்பனர் சுட்டுக் கொன்றபோதும், காமராஜரை டெல்லியில் தீ வைத்துக் கொளுத்திக் கொல்ல முயன்றபோதும் சம்பவங்களை எழுதினார்கள்; சம்பந்தப்பட்டவர்களை மறைத்தார்கள்.

’92 டிசம்பர் 6 ஆம் தேதி இடிக்கப்பட்ட பாபர் மசூதி இந்துத்துவாவாதிகளுக்கு ராமஜென்ம பூமி; இவர்களுக்கோ வெறும் சர்ச்சைக்குரிய கட்டடம் மட்டுமே.

இன்னும் பொடா, தடா, அவதூறு, உலகமயம், தாராளமயம், தனியார் மயம், கூடங்குளம், கொடியங்குளம் எல்லாத்துக்கும் அதிகார வர்க்கத்துக்கு முட்டுக் கொடுக்கிறவர்கள்தான்; அல்லது அதை நியாயப்படுத்துகிறவர்கள்தான் இவர்கள்.

சாதாரண கீரை விற்கிற பொம்பளக் கிட்ட போட்டிக்கு வரும் ரிலையன்சையும், வால்மார்ட்டையும் ஆதரிப்பார்கள். மக்களுக்குத் தரம்தான் ரொம்ப முக்கியம் என வக்காலத்தும் வாங்குவார்கள்.

அதுவே பத்திரிகைத் துறையில் நுழைய முயன்றால் அய்யய்யோ… அந்நிய முதலீடு ஆபத்து என்று டெல்லி சுல்தான்களை நோக்கி காவடி எடுத்து ஓடுவார்கள்.

கள்ளக்காதல், கற்பழிப்பு எல்லாவற்றையும் பக்கத்தில் நின்று விளக்கு புடிச்சவன் மாதிரி விலா வாரியாக இவர்கள் எழுதுவார்கள். இவுங்க எழுதுறது உண்மைன்னா சம்பந்தப்பட்ட வழக்குகளில் இவர்களையும் ஒரு சாட்சியா சேர்த்துக்கணுமே

.மொத்து வாங்குறப்ப பத்திரிகை சுதந்திரத்துக்கே அடி என்பார்கள். பக்கம் பக்கமா ஆபாசத்தை கடைவிரிக்கும்போது நாங்க வியாபாரிங்கதான் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பார்கள்.

நமக்கு அவதூறு, ஆள்தூக்கி சட்டங்கள்; இவுங்களுக்கு சட்ட சபை கூண்டுல ஏத்தி செல்லமா ஒரு கண்டனம்.

சுருக்கமா என்ன சொல்ல வர்றீங்க? நம்மள பின்னி பெடலெடுக்கிற மாதிரி அவுங்களையும் பண்ணனும். அப்படித்தானே…?’

மாப்ள… கடுப்பாகாத… அப்படிச் சொல்ற நிலைமைக்கு எங்கள கொண்டு வந்துடாதீங்கன்னு சொல்றேன்.

சரி, நான் முதல்ல கேட்ட கேள்விக்கு இன்னும் சரியா பதில் சொல்லவேயில்லையே? ஒரு கருத்துக்கு எதிரா வன்முறையில பதில் சொல்றது எப்படி சரி?’

கருத்தை கருத்தால எதிர்கொள்ளணும்கிறது யாருக்குப் பொருந்தும்?

 கருத்து மோதலை நிகழ்த்துகிற இரு தரப்பும் சம வாய்ப்பிலும், வசதியிலும் இருந்தால் மட்டும்தானே?

 நாலு பேரு ஒண்ணா சேர்ந்து காபி குடிக்கப் போனாலே இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் அணி திரண்டனர் என்று புளுகுகிறவன் பத்திரிகையில், அம்பத்தாறு வருசமா வாய்ப்பு மறுக்கப்பட்டவன் கருத்துக்கு இடம் இருக்கிறதா?

 ஸ்ரீலங்கா அரசின் விருதை கொஞ்சம்கூட கூச்சமின்றி வாங்கிய இந்து ராம்ஈழ விடுதலைக்கு எதிராக எழுதுவதை கருத்து என்று சொல்வதை விட கூலிக்கு மாரடிக்கிறான்னு சொல்வதுதானே சரியாக இருக்கும்..

இப்படிப்பட்ட கருத்துப் புரட்டாளர்களுடன் என்ன கருத்து மோதல் நிகழ்த்த முடியும்?

 அக்ரகாரத்து இந்துஎக்ஸ்பிரஸ் அவுட்லுக் புளுகு மூட்டைகளை விட்டுத் தள்ளு. தினத்தந்தியாவது நியாயமான மாற்றுக் கருத்துக்கு இடம் கொடுக்குமா?’

பத்திரிகைன்னா தினத்தந்தியும், இந்துவும் மட்டும்தானா? தீக்கதிரும், ஜனசக்தியும் பத்திரிகைகளா ஒங்க கண்ணுக்குத் தெரியலையா?’

‘‘யோவ், வாயில அசிங்கமா வந்துட போவுது @ முல்லைப் பெரியாறு பற்றியோ, சேலம் கோட்டம் பற்றியோ, அச்சுதானந்தனின் அவதூறுகளுக்கு பதில் சொல்லியோ ஒரு கட்டுரை எழுதி தர்றேன். அத முழுசா கூட இல்ல, ஒரே ஒரு பத்தி மட்டும் தீக்கதிர்ல போட்டா போதும். போடுவீங்களா?  

அட ஞானசூன்யமே, நேத்திக்கு இதே எடத்துல ஒங்க சி.பி. எம். ஆளுங்க தினகரன் பத்திரிகைகளை வாங்கி நடு ரோட்டு போட்டு போகி மாதிரி கொளுத்தி கோசம் போட்டீங்களே… எதுக்கு?’

அதுவா… ஐதராபாத் குண்டு வெடிப்புக்கு நாங்க பக்த்சிங் படத்தைப் போட்டு வெளியிட்ட ஒரு துண்டுப் பிரசுரத்தைச் சம்பந்தப்படுத்தி தினகரன் எங்கமேல அவதூறா ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. அதை கண்டிச்சுதான் அந்தப் போராட்டம்.

‘‘அவதூறான செய்தின்னா அதைக் கண்டிச்சு தீக்கதிர்ல எழுதி தினகரனோடு கருத்துப் போர் நடத்த வேண்டியதுதானே?

நடு ரோட்டுல பத்திரிகைகளை ஏன் தீவச்சு எரிச்சீங்க?

பச்சையா சொன்னா வலுத்தவன் ஆபிசுக்குள்ளார புகுந்து அடிச்சான். அது இல்லாத நீங்க பத்திரிகைகளை எரிச்சீங்க.

 நந்திகிராம சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு டாடா கம்பெனிக்கு இடம் எடுக்காதேன்னு சொன்னா உங்க கொள்கைப்படி அவர்களோடு கருத்துப் போர் நடத்தி அவர்களை வென்றெடுத்திருக்கணும்.

ஆனா, துப்பாக்கியை தூக்குனீங்க.

ஒங்களால கடைப்பிடிக்க முடியாத தத்துவத்தையெல்லாம் ஏன் அடுத்தவன் தலையில கட்டுறீங்க? ”

அப்ப உங்க கருத்தைச் சொல்ல நீங்கதான் பத்திரிகை நடத்தணும்

ரொட்டி வாங்க காசு இல்லேன்னு சொன்னா கேக்கு வாங்கி சாப்பிட சொன்னவன் கதையாயிருக்கு.

 காம்ரேடுங்க நல்லாதான் டெவலப் ஆகியிருக்கிறீங்க.

காலைல பேப்பர் வாங்கவே ஒவ்வொருத்தன் பையையும் தடவி மூணு ரூவா தேட வேண்டியிருக்கு. இந்த லட்சணத்துல என் கருத்தைச் சொல்ல நான் பத்திரிகை நடத்தணுமா?  

அவ்ளோ பெரிய நெட் ஒர்க்குக்கு எதிரா ஐயாயிரம் காப்பி கருத்துப் பரவல் எம்மாத்திரம்?  

கருத்தைப் பரப் புறது.. காலைப் பரப்புறது எல்லாம் இனி வேலைக்காகாதுன்னு தெரிஞ்சுதான் ஒங்காளுங்க பேனாவைத் தூக்கி கடாசிட்டு, தீப்பெட்டியைக் கையிலெடுத்து பத்திரிக்கை க்குத் தீவச்சிருக்காங்க…

… நந்திகிராமில் துப்பாக்கிய தூக்கி சுட்டுத் தள்ளுனாங்க.

அப்ப?

நம்ம ஆயுதங்களை நாம் மட்டுமல்ல, எதிரிகளும் சில நேரங்களில் தீர்மானிக்கிறாங்க….