சேரனின் தொலைபேசி கோபம்

cheran.jpg

18.5.2007 அன்று மதியம் 1.30 மணி அளவில் நமது தொலைபேசிக்கு தமிழ் திரைப்பட இயக்குனர் சேரன் 19ஏ, சிவசைலம் தெரு, தியாராய நகர் சென்னையில் உள்ள அவரது அலுவலக தொலைபேசியில் இருந்து நம்மை அழைத்தார்.

‘சமூக விழிப்புணர்வு’ மே மாத இதழில் வெளிவந்துள்ள அவரது மாயக்கண்ணாடி திரைப்படம் குறித்த விமர்சனம் குறித்துப் பேச விரும்புவதாக தெரிவித்தார்.

‘சரி பேசுங்கள்’. என்றேன்.

‘நான் பார்ப்பனர் கிடையாது’ என்றார் சேரன்.

‘மிக நன்றாகத் தெரியும்’ என்றேன்.

‘நான் குலத் தொழிலுக்கு ஆதரவானவன் கிடையாது. அந்தக் கருத்தினை வலியுறுத்தி நான் படம் எடுக்கவில்லை’ என்றார்.

நான் மௌனமாக இருந்தேன்.

நான் கஷ்டப்பட்டு, அடிபட்டு, மிதிபட்டு மிகுந்த சிரமத்திற்கிடையே இயக்குனராக இன்று உயர்ந்துள்ளேன். நீங்கள் விமர்சனத்தில் கூறியுள்ள வழியில் உயர்ந்த நிலைக்கு வரவில்லை என்றார். நல்ல செய்தியை நம்மால் முடிந்த நான்கு பேருக்கு சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்த துறைக்கு வந்துள்ளேன். சில இயக்குனர்களைப் போல பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது எனது எண்ணம் கிடையாது என்ற சேரன் தொடர்ந்து கோபமாகப் பேசினார்.

‘சமூக விழிப்புணர்வு’ போன்ற இதழில் இதுபோன்ற தரக்குறைவான விமர்சனம் வந்துள்ளதால்தான் நான் பேச வேண்டி இருக்கிறது’ என்றார். ‘இந்தப் படத்தில் கூறப்படும் கதையை நான் ஒரு கோணத்தில் கூறியுள்ளேன். ஆனால் நீங்கள் வேறொரு கோணத்தில் நான் குலக்கல்விக்கு ஆதரவானவன் என்பதாக தவறாக விமர்சித்துள்ளீர்கள்’ என்றார்.

‘நமது சேரன் இப்படி எடுத்துட்டாரே? என்ற ஆதங்கத்தில் எழுதப்பட்ட விமர்சனமாக எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றேன்.

சேரனின் கோபம் பல மடங்கு அதிகரித்தது. ‘தயவு செய்து அவ்வாறு கூறாதீர்கள். இது அப்படி எழுதப்பட்ட விமர்சனமாகத் தெரியவில்லை.

‘நான் பெரிய மயிரு பிடுங்கின்னு நெனக்கிறவனும் இல்ல. மயிரு பிடுங்கறத கேவலமா நினைக்கிறவனும் இல்ல’ என்று கோபத்துடன் கூறினார். நான் உங்களை நேரில் சந்திக்க விரும்புகிறேன். எனது திரைப்படம் குறித்து விவாதிப்போம். நீங்கள் எவ்வாறு படம் எடுக்க வேண்டும் என்பது குறித்து எனக்கு அறிவுரை கூறுங்கள். நான் என்னிடம் தவறு இருப்பின் திருத்திக் கொள்கிறேன். இன்று மாலை 6 மணிக்கு நானே உங்களுக்கு போன் பண்ணுகிறேன். கண்டிப்பாக, இன்று உங்கள் அலுவலகத்தில் சந்திக்க வேண்டும். திரைப்படம் குறித்தும் விமர்சனம் குறித்தும் விவாதிக்க வேண்டும்’ என்று மிகவும் கோபத்துடன் கூறினார்.

நானும் சரி என்று கூறினேன். உரையாடல் இத்துடன் நிறைவு பெற்றது.

தமிழகத்தின் மிகச் சிறந்த திரைப்பட இயக்குனர் சேரன் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை. சேரனுக்கு திரைப்படம் எடுப்பது குறித்து அறிவுரை கூறும் அளவுக்கு திரைப்பட அறிவு நமக்கு இல்லை. ஆனாலும் சேரனை நாம், மாலையில் சந்திக்கும் பொழுது தேசிய கீதம்’ என்ற அவரது படத்தில் கூறிய ‘புரட்சிகர அரசியல்’ குறித்தும், காந்தி, பெரியார், காமராஜருக்கு அடுத்து ரஜினிதான் மிகச் சிறந்த தலைவர் என்ற அவரது குங்குமம் பேட்டி குறித்து விவாதிக்கவும், அவரிடமிருந்து ‘அரசியல் கற்றுக்’ கொள்ளவும் ஆர்வமாக இருந்தோம்.

ஆனால் ஏனோ சேரன் அதன் பிறகு நம்மை அழைக்கவே இல்லை.