ஒக்ரோபர் 2007
Monthly Archive
ஒக்ரோபர் 31, 2007
Posted by தீஸ்மாஸ் டி செல்வா under
கட்டுரைகள்
1 பின்னூட்டம்

“கடவுள் இல்லை என்று சொல்கிறோமே… திடீர்னு கடவுள் வந்துட்டா என்ன அய்யா பண்றது?”
“இருக்கிறாருன்னு சொல்லிட்டுப் போவோம்.”
தந்தை பெரியாருக்கும், சாதாரணத் தொண்டர் ஒருவருக்கும் இடையில் நடந்த உரையாடல் இது.
ஒருவேளை, அந்த அப்பாவித் தொண்டருக்குப் பதில் இன்னொருவர்,
அதாவது கொஞ்சம் வெவரமானவரு…
நாலு உலக விசயம் தெரிஞ்சு வச்சிருக்கிறவரு…
வேற யாரு… நம்ம சி.பி.எம்.முதான்…
அதே கேள்வியைக் கேட்டிருந்தால்?
அதே பதிலைத்தான் சொல்லியிருப்பார் பெரியார்.
ஆனா, சி.பி.எம்முங்க வெவரமானவங்க மட்டுமில்லையே, கொஞ்சம் வெவகாரமானவங்களுமாச்சே…
தெருக்கூத்துல சாமி வேசம் கட்டி ஆடுறவன் எவனையாவது பிடிச்சுக் கொண்டாந்து ‘இதோ கடவுள்! இப்ப இருக்கிறாருன்னு சொல்லு’ என்று தர்ணா நடத்தியிருப்பார்கள்.
கற்பனை கொஞ்சம் அதிகம்தான் என்பவர்கள் சேலம் கோட்டப் பிரச்சனை சமூகமாகத் தீர்க்கப்பட்டு விட்டது என்ற தோழரின் பச்சைக் புளுகை மீண்டுமொருமுறை படித்துக் கொள்ளலாம்.
எப்படித் தீர்த்தார்கள்?
மதுரை கேட்டத்தில் இருந்த பொள்ளாச்சியையும், கிணத்துக்கடவு உள்பட 79 கி.மீ. பகுதிகளையும் சேட்டன்மார்களுக்குக் கைமாற்றி விட்டு, கோவை, திருப்பூரை மீட்டார்கள்.
மொழி வழி மாநிலங்கள் போல், மொழி வழி கோட்டம் கேட்டு மட்டுமல்ல, இந்தப் போராட்டம்! கோவை பகுதிகளிலிருந்து பெற்ற வருமானத்தில் பாலக்காட்டின் தொப்பை மட்டும் தனியாக வளர்ந்ததால் வந்த வயிற்றெரிச்சலில் எழுந்ததுதான் சேலம் கோட்டச் சிந்தனை.
ஆனால், வயித்து வலியை சரிசெய்த மருத்துவன் கிட்னியைத் திருடிக் கொண்ட கதைபோல, கோவையை மீட்க நடந்த போரில் பொள்ளாச்சியைப் பறிகொடுத்திருக்கிறார்கள்.
பாலக்காடுடன் இருந்ததால் தமிழர் பகுதிகள் வளர்ச்சியடையாமல் போனது உண்மை. அந்த உண்மை பொள்ளாச்சிக்கும் பொருந்தும்தானே!
கோவை வாழ, பொள்ளாச்சி மட்டும் நாசமாகப் போக வேண்டுமா?
இது என்ன சுமூகத் தீர்வு?
வெங்காயம்!
சரி,
உங்கள் மகிழ்ச்சியைக் கெடுக்க விரும்பாமல் கேட்கிறேன்.
இதையே ஒரு நல்ல தீர்வாக எடுத்துக் கொண்டால்கூட தமிழக சி.பி.எம். கிளை இதற்காகச் செய்ததென்ன?
பட்டியல் போடுங்கள்.
கிடுகிடு போராட்டம், மறியல்…
ம்ஹீம்… அதெல்லாம் அசல் மார்க்சிஸ்டுகளுக்கு.
நீங்கள் காந்தியிஸ்டுகள்.
குறைந்தபட்சம், அச்சுதானந்தனின் முகத்திலறைகிற மாதிரி ஏதேனும் அறிக்கை?
“சகோதர பாசம் கெட்டுவிடக்கூடாது” என்று வேண்டுகோள் விட்டீர்கள்.
அதுவும் அச்சுவுக்கு அல்ல, பாதிக்கப்பட்ட நமக்கு.
இந்த லட்ச™த்தில் “மார்க்சிஸ்டுகள் கேரள நலனைப் பலிகொடுத்து விடுவார்கள்” என்று கேரளாவில் இவர்களைப் பார்த்து வசைமாரி பொழிகிறார்களாம்…
‘காம்ப்ளிமென்டரி காப்பி’யாக ஆபீசுக்கு வரும் தேசாபிமானி, ‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’ இதழ்களை மட்டுமே படித்துக் கொண்டிருந்தால் இப்படித்தான் உளறிக் கொண்டிருக்க வேண்டியிருக்கும்.
கேரள மக்களை இவ்வளவு மட்டமாக எடை போடாதீர் தோழரே…
“போக்குவரத்தில், வேலைவாய்ப்பில், உணவுத் தேவையில் தமிழகத்தைப் பெருமளவு சார்ந்திருக்கும் நாம் இவற்றையெல்லாம் இழப்பாகக் கருதக்கூடாது” என்று பல எழுத்தாளர்கள், திரைத்துறைக் கலைஞர்கள், சிந்தனையாளர்கள் அச்சுதானந்தன் அரசுக்கு அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
அவர்கள் தமிழர்கள் அல்ல, மலையாளிகள்தான்.
இன்னொரு உண்மை அவர்கள் சி.பி.எம். ஆதரவாளர்கள் இல்லை.
ஆபாசத்தைக் கடைவிரிக்கும் சினிமா வியாபாரி மக்களின் ரசனைமேல் பழியைப் போட்டு தன்னை நியாயப்படுத்திக் கொள்வதுபோல் இருக்கிறது கேரள சி.பி.எம்.முக்கு நீங்கள் வாங்கும் வக்காலத்து.
கேரள மக்களுக்கு வெறியேற்ற முயற்சிப்பதுதான் சி.பி.எம்.மின் சமீபகால அரசியலே.
ஸ்டீபன் ஸ்பீல் பெர்க்கை மிஞ்சும் அளவுக்கு கிராபிக்சில் கலக்கிய முல்லைப் பெரியாறு அணை உடைப்பு சி.டி. ஒளிபரப்பு மக்களுக்கு சி.பி.எம். நடத்திய சித்தாந்த பாடமில்லை.
பச்சையான இனவெறி அரசியல்.
பாலக்காட்டிலிருக்கும் தண்டவாளங்களையெல்லாம் ராவோடு ராவாக பெயர்த்தெடுத்து, இரயில் பெட்டிகளை லாரியில் ஏற்றி சேலம் கொண்டு போவதுபோல் அடுத்து ஒரு கிராபிக்ஸ் தயாரிக்காமல் இருந்தால் சரி.
மக்கள் முன்னால் மக்கள் பிரதிநிதிகள் நிற்க வேண்டும்தான்; பதில் சொல்ல வேண்டும்தான்.அதற்காக மக்கள் போக்கிலே போய்விட முடியாது.
‘கம்யூனிஸ்டு’ என்று பெயர் வைத்து கட்சி நடத்துகிறவர்கள் நிச்சயம் அப்படி நடந்துகொள்ள கூடாது.
“மக்கள் அவர்கள் விருப்பப்படி வாழ நாம் அனுமதிக்க முடியாது” என மாமேதை லெனின் எழுதியதை மறந்துவிட வேண்டாம்.
மக்கள் முன் நிற்கும் அந்தக் கடமைதான் முதன்மையானது என்றால் இங்கேயிருந்தும் இரண்டு பேர் மக்களிடமிருந்து வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் போயிருக்கிறார்களே…
அவர்களுக்கு?
இல்லை, அடுத்து வரும் தேர்தல்களில் மோகன் பாலக்காட்டிலும், பெல்லார்மின் ஒத்தப்பாலத்திலும் நிற்கப் போகிறார்களா?
உங்கள் அணுசக்தி சமாச்சாரம் குறித்து தனி கட்டுரையே எழுத வேண்டும். அதை இன்னொரு தடவை பார்த்துக் கொள்ளலாம்.
கடைசியாக ஒரு சந்தேகம்.
‘டாடா’ கொடுத்த காசை திருப்பி அனுப்பிவிட்டீர்கள்.
ரொம்ப நல்லது.
திருட்டு லாட்டரி அதிபர் மார்ட்டின் கொடுத்த மாமூலை?(உங்கள் கணக்கில் அதற்குப் பெயர் நன்கொடை)
கல்லாவில் வாங்கிப் போட்டார்களா,
அல்லது ‘கண்ணெடுத்தும் பாரோம்’ என்று ‘டாடா’வுக்கு அனுப்பியதுபோல் திருப்பியனுப்பினார்களா?
தயவுசெய்து அச்சுதானந்தனிடம் கேட்டு விட வேண்டாம்.
தேசாபிமானி மேலாளரை கைகாட்டி விடுவார் அவர்.
கோத்ரெஜ் பீரோ மாதிரி ஏதோ ஒரு பீரோ வைத்திருக்கிறீர்களே… என்ன அது?
ம்… பொலிட்பீரோ?
அந்தப் பீரோவில் உள்ளவர்களிடம் கேட்டு தகவல் சொல்லுங்கள்.
மற்றவை விழிப்புணர்வு வழியாக…
தீசுமாசு டி செல்வா
ஒக்ரோபர் 30, 2007
Posted by தீஸ்மாஸ் டி செல்வா under
திரைப்பட விமர்சனம்
1 பின்னூட்டம்
சேரனின் தொலைபேசி கோபம்

18.5.2007 அன்று மதியம் 1.30 மணி அளவில் நமது தொலைபேசிக்கு தமிழ் திரைப்பட இயக்குனர் சேரன் 19ஏ, சிவசைலம் தெரு, தியாராய நகர் சென்னையில் உள்ள அவரது அலுவலக தொலைபேசியில் இருந்து நம்மை அழைத்தார்.
‘சமூக விழிப்புணர்வு’ மே மாத இதழில் வெளிவந்துள்ள அவரது மாயக்கண்ணாடி திரைப்படம் குறித்த விமர்சனம் குறித்துப் பேச விரும்புவதாக தெரிவித்தார்.
‘சரி பேசுங்கள்’. என்றேன்.
‘நான் பார்ப்பனர் கிடையாது’ என்றார் சேரன்.
‘மிக நன்றாகத் தெரியும்’ என்றேன்.
‘நான் குலத் தொழிலுக்கு ஆதரவானவன் கிடையாது. அந்தக் கருத்தினை வலியுறுத்தி நான் படம் எடுக்கவில்லை’ என்றார்.
நான் மௌனமாக இருந்தேன்.
நான் கஷ்டப்பட்டு, அடிபட்டு, மிதிபட்டு மிகுந்த சிரமத்திற்கிடையே இயக்குனராக இன்று உயர்ந்துள்ளேன். நீங்கள் விமர்சனத்தில் கூறியுள்ள வழியில் உயர்ந்த நிலைக்கு வரவில்லை என்றார். நல்ல செய்தியை நம்மால் முடிந்த நான்கு பேருக்கு சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்த துறைக்கு வந்துள்ளேன். சில இயக்குனர்களைப் போல பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது எனது எண்ணம் கிடையாது என்ற சேரன் தொடர்ந்து கோபமாகப் பேசினார்.
‘சமூக விழிப்புணர்வு’ போன்ற இதழில் இதுபோன்ற தரக்குறைவான விமர்சனம் வந்துள்ளதால்தான் நான் பேச வேண்டி இருக்கிறது’ என்றார். ‘இந்தப் படத்தில் கூறப்படும் கதையை நான் ஒரு கோணத்தில் கூறியுள்ளேன். ஆனால் நீங்கள் வேறொரு கோணத்தில் நான் குலக்கல்விக்கு ஆதரவானவன் என்பதாக தவறாக விமர்சித்துள்ளீர்கள்’ என்றார்.
‘நமது சேரன் இப்படி எடுத்துட்டாரே? என்ற ஆதங்கத்தில் எழுதப்பட்ட விமர்சனமாக எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றேன்.
சேரனின் கோபம் பல மடங்கு அதிகரித்தது. ‘தயவு செய்து அவ்வாறு கூறாதீர்கள். இது அப்படி எழுதப்பட்ட விமர்சனமாகத் தெரியவில்லை.
‘நான் பெரிய மயிரு பிடுங்கின்னு நெனக்கிறவனும் இல்ல. மயிரு பிடுங்கறத கேவலமா நினைக்கிறவனும் இல்ல’ என்று கோபத்துடன் கூறினார். நான் உங்களை நேரில் சந்திக்க விரும்புகிறேன். எனது திரைப்படம் குறித்து விவாதிப்போம். நீங்கள் எவ்வாறு படம் எடுக்க வேண்டும் என்பது குறித்து எனக்கு அறிவுரை கூறுங்கள். நான் என்னிடம் தவறு இருப்பின் திருத்திக் கொள்கிறேன். இன்று மாலை 6 மணிக்கு நானே உங்களுக்கு போன் பண்ணுகிறேன். கண்டிப்பாக, இன்று உங்கள் அலுவலகத்தில் சந்திக்க வேண்டும். திரைப்படம் குறித்தும் விமர்சனம் குறித்தும் விவாதிக்க வேண்டும்’ என்று மிகவும் கோபத்துடன் கூறினார்.
நானும் சரி என்று கூறினேன். உரையாடல் இத்துடன் நிறைவு பெற்றது.
தமிழகத்தின் மிகச் சிறந்த திரைப்பட இயக்குனர் சேரன் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை. சேரனுக்கு திரைப்படம் எடுப்பது குறித்து அறிவுரை கூறும் அளவுக்கு திரைப்பட அறிவு நமக்கு இல்லை. ஆனாலும் சேரனை நாம், மாலையில் சந்திக்கும் பொழுது தேசிய கீதம்’ என்ற அவரது படத்தில் கூறிய ‘புரட்சிகர அரசியல்’ குறித்தும், காந்தி, பெரியார், காமராஜருக்கு அடுத்து ரஜினிதான் மிகச் சிறந்த தலைவர் என்ற அவரது குங்குமம் பேட்டி குறித்து விவாதிக்கவும், அவரிடமிருந்து ‘அரசியல் கற்றுக்’ கொள்ளவும் ஆர்வமாக இருந்தோம்.
ஆனால் ஏனோ சேரன் அதன் பிறகு நம்மை அழைக்கவே இல்லை.
ஒக்ரோபர் 11, 2007
Posted by தீஸ்மாஸ் டி செல்வா under
கட்டுரைகள்
1 பின்னூட்டம்
2011 இல் நான்தான் முதலமைச்சர் என்று சொல்கிறாரே… சரத்குமார்?
இது ரொம்ப அதிகம்.
அண்ணாச்சியின் முதலமைச்சர் ஆசையைச் சொல்லவில்லை.
அதை 2011 வரை ஒத்தி வைத்திருக்கிறாரே… அந்தப் பெருந்தன்மையைச் சொல்கிறோம்.
நல்ல விசயங்களை நாள் தள்ளிப் போடக்கூடாது. உடனே காரியத்தில் இறங்கிடணும்.
சாமுண்டி, நாட்டாமை, நாண்டு கிட்டுச் செத்தவன்னு எத்தினியோ அற்புதமான கேரக்டர்கள்ல வாழ்ந்து காட்டிய சரத் அண்ணாச்சி முதலமைச்சராக ஒரு படத்துலகூட வேஷம் கட்டலையேங்கறது அவருடைய ரசிகர்களுக்கு மட்டுமல்ல, நமக்கும் பெரிய குறைதான்.
காலம் இன்னும் கடந்து போய்விடவில்லை. இப்பவே சூட்டிங் ஆரம்பிச்சா வர்ற பொங்கலுக்குள்ள கண்டிப்பா ரிலீஸ் பண்ணிடலாம் அண்ணாச்சி.
இராமர் பாலம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இதை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்கிறாரே இராம. கோபாலன்?

கோபாலய்யர் தயவுசெய்து கோபித்துக் கொள்ளக்கூடாது. சும்மா ஒரு பேச்சுக்குத்தான் சொல்கிறோம்.
கோபாலனின் அப்பா இராமன் என்பது ஒரு நம்பிக்கை.
‘அதெல்லாம் இல்லை, பக்கத்து வீட்டுக்காரன்தான்’ என ஒரு சந்தேகம் வந்துவிட்டால்…?கோர்ட்டுக்குப் போகணும். மரபணு சோதனைக்கு உட்பட்டாகணும்.
“ஆத்துல உள்ளவாளை சந்தேகப்படாதேள். ஏன்னா இது என்னோட நம்பிக்கை சம்பந்தப் பட்டது” என தப்பித்து ஓட முடியாது வீரத் துறவி அவர்களே!
இந்து மத நம்பிக்கையாளர்களுக்கு மட்டுமல்ல, எந்த மத நம்பிக்கையாளர்களுக்கும் இதுதான் விதி. பகுத்தறிவுக்குப் பதில் சொல்ல வக்கற்ற எல்லா நம்பிக்கைகளும் மூடநம்பிக்கைகள்தான்.
வயதாகி விட்டதால் முதல்வர் பதவியிலிருந்து கருணாநிதி விலக வேண்டும் என்கிறாரே ஞாநி?
நல்ல யோசனை! ஆனா, ஒரேயொரு சிக்கல்.கண்ணு தெரியாத காலத்திலும் பக்த கோடிகளுக்கு ‘அருளாசி’ வழங்கிக் கொண்டிருந்த சீனியர் சங்கராச்சாரிக்கு,காது ‘டமாரம்’ ஆன நிலையிலும் இசை விழாக்களைப் பற்றி சங்கீத விமர்சனம் எழுதிக் கொண்டிருந்த சுப்புடுவுக்கு…
இதுபோல கட்டாய ஓய்வுத் திட்டத்தை ஞாநி அறிவித்திருந்தால்…
அது ‘ஆ.வி.’யிலோ, ‘ ஜூ.வி.’யிலோ கூட எழுதியிருக்கத் தேவையில்லை – அவர் சொந்த டைரியில் ஒரு வார்த்தை… ஒரேயொரு வார்த்தை எழுதியிருந்தால் போதும்…
என்ன சொல்கிறீர் ஞாநியாரே…?
பழையபடி ஜெயலலிதா ஆட்சியைப் பிடிக்க வேண்டுமானால், கருணாநிதியை முதியோர் இல்லம் அனுப்புவதுதான் ஒரே வழி என நினைத்தால் அதை நேரிடையாகவேச் சொல்லிவிடலாம். முற்போக்கு முகமூடி கிழிந்து தொங்கி விடுமே என்று அச்சப்பட்டு சுற்றி வளைக்கத் தேவையில்லை.
ஞாநியின் கோர முகம் வெளிப்பட்டு நாட்கள் பலவாகிவிட்டது.
சோனியா காந்தி அவர் பெயரிலுள்ள ‘காந்தி’ என்ற சொல்லை நீக்கிவிட வேண்டுமென்று நியூயார்க்கில் போராட்டம் நடத்தியிருக்கிறார்களே….
போராடியவர்கள் காந்திக்குப் பிறந்தவர்கள், அல்லது பிறந்தவர்களுக்குப் பிறந்தவர்கள் என்று நீங்கள் நினைத்தால் அது ரொம்பத் தப்பு.
காந்தி என்ற ஆளே இருக்கக்கூடாது என்று கோட்சேவை வைத்துத் தீர்த்துக் கட்டியதே ஆர்.எஸ்.எஸ்.! அவாளோட சொந்தப் பிள்ளைகளும், தத்துப் பிள்ளைகளுமே இந்தப் ‘போராளிகள்’.
இவர்கள் ‘இந்தியனின்’ வரிப்பணத்தில் படித்துப் பட்டம் பெற்று வெள்ளையனின் கால் கழுவும் அக்ரகாரத்து அம்பிகள்.
என்ன ஒரு வினோதம் பாருங்கள்.
தாராளமயம் என்ற பெயரில் நமது நிறுவனங்களையெல்லாம் அந்நியனுக்குக் கூட்டிக் கொடுக்கிறவர்கள், பெயரை மட்டும் விட்டுத்தர அடம் பிடிக்கிறார்கள்.
நல்ல பாலிசி.
பாபர் மசூதி இடிப்பையும், இராமர் பால இடிப்பையும் ஒப்பிட முடியாது. பாபர் மசூதியை இடித்தது ஒரு கும்பல். இராமர் பாலத்தை இடிக்கப் போவது ஓர் அரசு என்கிறாரே… சோ?

அரசு என்றால் புரிகிறது.
கருணாநிதி, டி.ஆர்.பாலு.
கும்பல் என்றால்?
என்கௌன்டரில் போட்டுத் தள்ளப்பட்ட வெள்ளை ரவி, பங்க் குமார் கும்பலா? அல்லது, அயோத்திக் குப்பம் வீரமணி கும்பலா?
எந்தக் கும்பலென்று தெளிவாகச் சொல்ல வேண்டாமோ…
அத்வானி, உமாபாரதி, முரளி மனோகர் ஜோஷி மாதிரி ஒண்ணும் தெரியாத அப்பாவிகளை ஒருவேளை தப்பா நெனச்சுப்புட்டா எவ்வளவு விபரீதமாயிடும்?
எங்கள மாதிரி விவரங்கெட்டவனுங்க நாட்டுல எத்தனையோ பேரு இருக்கிறோம்.
ஆனாலும், பார்ப்பனர்களே நீங்க ரொம்பவும் விவரமாகத்தான் இருக்கிறீங்க.
சொன்ன சொற்களைவிட, சொல்லாமல் விட்ட சொற்கள் ரொம்பவும் பொருள் பொதிந்தவை இல்லையா!
ஜக்கி வாசுதேவ் மரம் நடுகிறாரே….

நட்டதெல்லாம் சரிதான்.
தண்ணி ஊத்தப் போறது யாரு?
“நான் ஊத்தப் போறேஞ்சாமி”ன்னு கோக்கோ கோலாக்காரன் பாட்டிலும் கையுமா வந்துடப் போறான் சாமி.
ஏன்னா, உங்க பிராஜெக்டுக்கு அவன்தானே பிரதான ஸ்பான்சர்.
தாமிரபரணியில தண்ணியெடுத்து அங்குள்ள பயிர் பச்சைகளை வாடச் செஞ்சதுக்கு இது பரிகாரம்போல என்று நம்மாளுங்க வழக்கம்போல கேணத்தனமா நெனச்சு வைக்க, கோலாக்காரன் தண்ணி ஊத்தினா பூச்சி மருந்து தெளிக்கிற செலவு மிச்சம்னு சுவாமிகளே நீங்க நினைக்கிறீங்களோ… என்னமோ…
ஆன்மீக வியாபாரிகளின் கணக்கே தனிதான்.
சென்னை நேரு ஸ்டேடியத்தில் ஒரே நேரத்தில் 14000 பேரு பல் துலக்கி கின்னஸ் சாதனை செய்திருக்கிறார்களே…

ஒரே ஆள் பதினாறாயிரம் பேருக்குப் பல்லை விளக்கி விட்டால் அது சாதனை.
அவனவன் பல்லை அவனவனே விளக்குவது என்ன சாதனை?
நமக்குத் தெரிஞ்சு ஜெயேந்திரன் மாதிரி நாலஞ்சு பேரைத் தவிர மத்தவங்க எல்லாம் ரெகுலரா பல்லு வெளக்குறவங்கதான்.
நல்ல வேளை,
கின்னஸ் சாதனைங்கற பேர்ல இந்தக் கிறுக்கனுங்க பதினாலாயிரம் பேரையும் ஒண்ணா கக்கூசுக்கு உட்கார வைக்காம விட்டானுங்க.
அதுவரைக்கும் தப்பிச்சோம்.
-சமூக விழிப்புணர்வு
ஒக்ரோபர் 4, 2007
Posted by தீஸ்மாஸ் டி செல்வா under
திரைப்பட விமர்சனம்
1 பின்னூட்டம்
தீஸ்மாஸ் டி செல்வா

“மதுரை மேலூர் பக்கத்துல ஒரு சினிமா ஆபரேட்டர் பையனுக்கு சினிமா ஆசை வந்துடுச்சு. சினிமாவுல சேந்து எப்பிடியும் பெரிய ஆளா, ஒரு பெரிய டைரக்டரா ஆயிடணும்னு துடியா துடிச்சான் அந்தப் பையன்.
ஆனா அதுக்காக அவன் கோடம்பாக்கம் பொறப்பட்டுப் போயி நாயா பேயா அலையல. தன் அப்பா வேலை பாத்த கொட்டாயிலேயே அவருக்கு கீழ எடுபிடியா வேல செஞ்சான். இடவேளை உட்டா முறுக்கு, சுண்டல் வித்து மேலும் தன்னோட திறமையை வளத்துக்கிட்டான்.
அசராத இந்த உழைப்பால சீக்கிரம் அந்தத் தியேட்டருக்கே ஓனர் ஆயிட்டான். அப்புறம் ஏ.வி.எம். மாதிரி ஸ்டுடியோ ஒண்ணு கட்டி, தான் கனவு கண்ட மாதிரி ஒரு டைரக்டரா ‘பாரதி கண்ணம்மா’, ‘பொற்காலம்’, ‘ஆட்டோ கிராப்’… இப்போது கடைசியா ‘மாயக்கண்ணாடி’ன்னு தமிழ்ச் சினிமாவையே கழுத்துச் சுழுக்கிக்கிற அளவுக்குத் திரும்பிப் பார்க்கிற மாதிரி படங்களா எடுத்துக்கிட்டிருக்காம்பா.”
“அந்த மேதையோட பேரு சேரனுங்களா?”
“ அட, எப்படி இவ்வளவு கரெக்டா சொன்னீங்க?”
“டேய் மடையா… பெத்த புள்ள என்ன படிக்குதுன்னு தெரியாதவன்கூட சினிமாக்காரன் என்னைக்கு பொறந்தான், யாருக்குப் பொறந்தான்கற கதையெல்லாம் நல்லாவே தெரிஞ்சு வச்சுருக்கான். நீ சொன்னதுல ஊரு, பேரு எல்லாம் ரொம்பச் சரியாத்தான் இருக்குது. ஆனா இந்த குமுதம் கடைசி பக்கத்துல போடுவானே ‘இந்தக் கதைகள்ல வர்ற சம்பவங்களெல்லாம் சுத்தக் கற்பனை, பொய்யின்னு…’ அந்த மாதிரி இருக்குது சேரனுக்கு நீ சொல்ற வரலாறு.”
“சரி, வரலாறை உடு சாமி. சினிமா ஆசையில கெட்டுச் சீரழியாம, சொந்தமா அவனவன் தொழிலைப் பாத்தா குடும்பத்துக்காகுமேன்னு ஒரு மனுசன் சொல்றது எப்படி தப்பாவும்?”
“தப்பில்லைதான். ஆனா சொல்றவன் அத்தனை பேரும் அவனவன் அப்பன் தொழில்லேந்து தப்பிச்சு ஓடியாந்து, சம்பந்தமில்லாத வேற ஒண்ணுல போய் பூந்துக்கிட்டு இதைச் சொல்றதல்லவா வேடிக்கை யாயிருக்கு.
செத்த மாட்டைத் தூக்குறவனும், மலம் அள்றவனும், காடு கழனியில வேல செய்யுறவனும் தன்னோட பிள்ளைங்களுக்கு தான் செய்யுற தொழிலை தினமும் காலையில கத்துக் குடுத்துட்டு அப்புறமா பள்ளிக்கு அனுப்புங்கடான்னு அந்தக் காலத்து அக்கிரகாரத்து ராஜாஜி குலக்கல்வி திட்டம் கொண்டு வந்தாரு.
சீப் மினிஸ்டரா இருந்த அவரை ‘உம்ம குலத்தொழில பார்க்கப் போய்யா’ன்னு தமிழ்நாட்டே தொரத்தியடிச்சது.
‘அவா அவாளுக்கு விதிக்கப் பட்டதைச் செய்தால்தான் இந்த லோகம் ரொம்பத் திவ்யமா, ஷேமமாயிருக்கும்’னு செத்துப்போன சங்கராச்சாரி முதற்கொண்டு, இப்ப உயிரோட இருந்து மத்தவாளைச் சாகடிக்கிற சங்கராச்சாரி வரைக்கும் சொல்ற அருளுரையை சமூக அக்கறை என்ற பெயரில் மூணு மணி நேர படமா எடுத்து நம் தலையில் கட்டியிருக்கும் சேரனை, ராஜாஜியை அனுப்பியதுபோல் பழையபடி சினிமா ஆபரேட்டர் வேலைக்குத்தான் அனுப்ப வேண்டும்.
ஆனா அதுகூட அவங்கப்பாவோட குலத்தொழிலா இருக்க வாய்ப்பில்லையே!
ஒரு பேச்சுக்கு இந்த அப்பன் தொழில் சமாச்சாரத்தை ஒத்துக்கிட்டே ஒரு கேள்வி கேட்கலாம்.
நம்ம அப்பன், ஆத்தா செய்யுற எந்தத் தொழிலு இன்னைக்கு லாபமா இருக்கு?
ரிலையன்சும், வால்மார்ட்டும் வந்து தமிழ்நாட்டுல பாதி சில்லறை வியாபாரிகளை காலி பண்ணி தெருவுக்கு தொரத்திட்டான்.
நாளையே டாடாவும், இன்போசிஸ் நாராயணமூர்த்தியும் வந்து சேரன் வேலை செய்யச் சொல்லும் பார்பர் ஷாப்பிலும் கால் வைத்து கையில் கத்திரியை பிடிக்கமாட்டார்கள் என்று உத்தரவாதம் கொடுக்க முடியுமா?
அப்பனே பொழப்பத்துப் போய் சோத்துக்கு சிங்கியடிக்கும்போது புள்ள போய் யார் மயிரைப் புடுங்க முடியும்?
இந்தக் கருமாந்திரம் புடுச்ச கதைக்கு மாயக் கண்ணாடின்னு பேரு வச்சதுக்குப் பதிலா வெறுமனே கண்ணாடின்னு அவரு பேரு வச்சிருக்கலாம். என்னதான் கண்ணாடி மூஞ்சியக் காட்டுனாலும் அது வலத்தை இடமாவும், இடத்தை வலமாவும்தானே காட்டும்?
சேரன் சொல்வதுபோல் இன்னைக்கு சம்பாதிக்க அலைகிற இளைஞர்களின் கனவு நாயகன் யாரும் கோடம்பாக்கத்தில் இல்லை. அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில் பில்கேட்ஸ் என்ற பெயரில் இருக்கிறான்.
அரைகுறை படிப்பாளிகளும் (அல்லது அறிவாளிகளும்) படிக்க வக்கத்துப் போனவர்களுக்குமே கோடம்பாக்கத்தை குறி வைக்கிறார்கள்.
அவர்களின் முதல் கனவு கூட பணமல்ல, புகழ் பெறும் ஆசைதான்.”
“ குலத்தொழிலு கதைய வுடுங்கண்ணே. சினிமா ஆசையில கெட்டுச் சீரழியாதீங்க, மொதல்ல அதுக்குண்டான தெறமைய நல்லா வளர்த்துக்கங்கன்னு சொல்றாரே… அதுவும் வேணாங்கிறீங்களா?”
“ஏம்பா ஒன் நெஞ்சுல கை வச்சி சொல்லு… இப்ப இருக்குற விஜயகாந்து, நெப்போலியன், சரத்குமாரு மாதிரி நடிப்புச் செம்மலுங்க எல்லாம் தன்னோட தெறமையாலதான் சினிமாவுக்கு வந்தாங்களா, இல்ல வந்த பிறகுதான் அந்தத் தெறமைய வளத்துக்கிட்டாங்களா?
அப்படியில்லாதபோது மத்தவங்களுக்கு மட்டும் ஏன் தகுதி, திறமை அளவுகோலை சொல்றாரு சேரன்.
இது சுத்தப் பார்ப்பனியச் சிந்தனையா ஒனக்குத் தெரியலையா?
இளைஞர்களுக்கு நல்வழிகாட்டுறேன்னு படமெடுக்கிறவன், தான் எந்த ரூட்டுல உள்ளே போனானோ அந்த ரகசியத்தை மத்தவங்களுக்கும் சொல்லிக் கொடுக்கிறதுதானே நியாயம்
. அத உட்டுப்புட்டு எப்படியோ இவுங்க உள்ள போய் நல்லா செட்டிலாயிட்டு, புதுசா வர்றவனுக்கு ‘வராதே’ன்னு கதவடைக்குறது அயோக்கியத்தனம் இல்லையா?”
“ஒருவேளை அவுங்க போன ரூட்டு நாலு பேருக்குச் சொல்ற மாதிரி கௌரவமா இல்லாமலும் இருக்கலாமில்லையா? அப்படி ஒரு அசிங்கமான சமாச்சாரத்தை எப்படிச் சொல்ல முடியும்?”
“இளைஞர்களுக்கான தீப்பந்தம், தீவட்டின்னு விளம்பரத்துல சொன்னா போதுமா? உண்மையைச் சொல்லும் துணிச்சல் கொஞ்சமாவது வேண்டாமா?
கள்ளப்பணம், விபச்சாரம், கந்துவட்டி, உழைப்புச் சுரண்டல் இல்லாமல் ஒரு தமிழ் சினிமாவை எடுத்துவிட முடியுமா?
தன் துறையில் மலிந்திருக்கும் இத்தகைய கேடுகளை பற்றிய சுய விமர்சனம் செய்ய வக்கற்றவன் பிற, ஒட்டுமொத்த சமூகத்தின் கேடுகளைச் சாட உரிமை பெறுவது எப்படி?
சாக்கடையாப் போச்சுன்னு சொல்ற அரசியல்வாதிங்ககூட ஒருத்தர இன்னொருத்தவர் விமர்சனம் பண்றாங்க. இன்னும் ஒருபடி மேல போய் தங்களையேகூட சுயவிமர்சனத்துக்கு உட்படுத்திக்கிறாங்க.
பாபர் மசூதியை இடிச்சதுக்காக அத்வானி நெறய தடவை அழுதிருக்காரு (!). பா.ச.க.வோடு சேர்ந்த தப்புக்காக ஜெயலலிதா கேட்ட மன்னிப்பில் காம்ரேடுகளே கதிகலங்கி போனார்கள்.

இந்தக் குறைந்தபட்ச ‘நேர்மை’கூட இல்லாம சமூக அவலங்களைச் சாட தொடை தட்டி கிளம்புவது ஏன்?
இந்த மாயக்கண்ணாடி கதையை கொஞ்சம் மாற்றி, சேரனுக்குப் பதில் கதாநாயகி நவ்யா சினிமா வாய்ப்புக்காக அலைவதாகக் கதை பண்ணியிருந்தால்…?
ஒட்டுமொத்த தமிழ்ச் சினிமாக்காரர்களின் லட்சணத்தையும் ஒரே வரியில் போட்டுடைக்கிற மாதிரி ஒரே வரியில் படத்தின் கதையை இப்படிச் சொல்லலாம்
:சேரனை கேட்டுக்கு வெளியே நிறுத்திய கோடம்பாக்கம், நவ்யாவை படுக்கையறை வரை அழைத்துச் சென்றிருக்கும்.
ஒக்ரோபர் 2, 2007
Posted by தீஸ்மாஸ் டி செல்வா under
கட்டுரைகள்
1 பின்னூட்டம்
தீசுமாசு டி செல்வா
ஆகஸ்டு 25, நண்பகல்.
சேலம் இரயில்வே கோட்டம் அமைக்கப்படவும், அதற்கான தேதியை உடனே அறிவிக்கவும் நடந்த இரயில் மறியல் போராட்டச் செய்திகளை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தபோது அந்த அதிர்ச்சியான செய்தி வந்து சேர்ந்தது
.“சி.பி.எம்.ஐ.த் தடை செய்து விட்டார்களாம்.”
சன் டிவி தொடங்கி அல்ஜசீரா வரை சானலை மாற்றிப் பார்த்து விட்டேன்.
எங்கேயும் அந்தச் செய்தி இல்லை.
செய்தி கொண்டு வந்த அழகிரி என் தலையில் அடித்துச் சத்தியம் செய்தான்.
“தகவல் உண்மையானது தோழா. இன்னும் கொஞ்ச நேரத்தில் அதிகாரப்பூர்வமான செய்தி வரும். பார்த்துக் கொண்டே இரு.”
குண்டைத் தூக்கிப் போட்ட அழகிரி போய்விட்டான்.
‘என்ன எளவு காரணத்துக்காகச் சி.பி.எம்.ஐ. தடை செய்திருப்பார்கள்?’
அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்ப்பதற்கா?
இருக்காதே…!
அணுசக்தி ஒப்பந்தட்தை எதிர்த்தாலும், கூடங்குளத்தில் அதைஆதரிப்பவர்களாயிற்றே..
.முன்னது அமெரிக்கா; பின்னது ரஷ்யா! அவ்வளவுதானே விட்தியாசம்!
ஈழ விடுதலைப் போரிலிருந்து இந்திய இறையாண்மை வரை காங்கிரசுக்காரனுக்கே கிளாஸ் எடுக்கும் அளவுக்கு தேசபக்தி பொங்கிப் பாய்ந்து பிரவாகமெடுக்கும் நம்ம காம்ரேடுகள்மீது தடை விதிப்பது தற்கொலை முயற்சியில் அல்லவா முடியும்?
கம்யூனிச புரட்சியாளர்களை காங்கிரசுக்காரன் வேட்டையாடுவான், காம்ரேடுகளோ காட்டிக் கொடுப்பார்கள், அல்லது கண்டுகொள்ளாமல் இருப்பார்கள்.
அவர்களுக்கு அம்பானி என்றால் இவர்களுக்கு டாடா.
எதுக்குத் தடை?
ஒருகாலட்தில் ஆயுதப் புரட்சியின் மூலம் ஆட்சியையே கவிழ்ட்து விடுவார்கள் என பயந்த நேரு இவங்களைட் தடை செய்தது வாஸ்தவம்தான்,
பாவம், காய்கறி நறுக்கக்கூட கத்தியைக் கையில் எடுக்காத அகிம்சாமூர்ட்திகள் இவர்கள் என்ற உண்மை தெரிந்த நேரு வெட்கப்பட்டு, தடையை விலக்கிக் கொண்ட வரலாறை காங்கிரசுக்காரன் அதற்குக்குள்ளாகவா மறந்து போனான்?
எந்த நிமிடத்திலும் ‘சி.பி.எம்.முக்குத் தடை’ என்ற பிளாஷ் நியூஸ் மின்னும் என்று நடுக்கத்தோடு சன் டி.வி. முன்னால் மணிக்கணக்கில் ஆடாமல், அசையாமல் இருந்த வேளையில் “தோழா” என்ற குரல் மீண்டும் கேட்டது
.அவன்தான்.
அழகிரிதான்
.“என்ன தோழா… உன்னை கேணப்பயக் கணக்கா ஆக்கிப்புட்டேன்னு பீல் பண்றியா… சேலம் கோட்ட நியூஸ் இப்ப காட்டுவான்… அத நல்லா உத்துப் பாரு. அப்புறமா என்னைக் கேள்வி கேளு”
அழகிரிமேல் வந்த ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
சேலம், ஈரோடு, கோவை ஊர்களில் இரயில்கள் ஆங்காங்கே நிற்க, ஆயிரக்கணக்கில் கோவை சட்டக்கல்லூரி மாணவர்களும், ஆண்களும், பெண்களும் கட்சிக் கொடிகளுடன் தண்டவாளங்களில் உட்கார்ந்து ஆவேசமாக கோசம் போட்டுக் கொண்டிருந்தார்கள்.
சில இடங்களில் ‘கல்லக்குடி கொண்ட கருணாநிதி’ போல தண்டவாளங்களின் குறுக்கே உயிரைப் பணயம் வைத்தபடி படுத்திருக்கும் பெண்கள்.சிக்னல்களை முடக்கிப் போடும் இளைஞர்கள்.இரயில் நகர முடியாதபடி தண்டவாளங்களில் கட்டைகளையும், மண்ணையும் அள்ளிப் போடும் சிறுவர்கள், முதியவர்கள்…
பார்க்கும் போதே என் தோள்கள் தினவெடுத்தன
.“ஆகா… இந்தி எதிர்ப்புப் போருக்குப் பிறகு இப்படியொரு வீரஞ்செறிந்த போராட்டத்தை தமிழ்நாட்டில் இப்பதானப்பா பார்க்கிறேன்.”
அழகிரி குறுக்கே புகுந்தான்.
“உன் புல்லரிப்பை அப்புறம் வச்சுக்க.. போராட்டத்துல கலந்துகிட்டவுங்ககிட்ட ஒண்ணு குறையுதே… அத கவனிச்சியா?”
“என்னப்பா குறையுது?”
“அட குறை மாசத்துல பொறந்தவனே… போராட்டத்துக்கு வந்தவனெல்லாம் அவனவன் கட்சிக் கொடிகளோட வந்தானே… அத நல்லா உட்துப் பாத்தியா?”
“பார்த்தேனப்பா.. அதுல என்ன பிரச்சனை? எவனாவது கொடியை தலைகீழாவோ, இல்ல அரைக் கம்பத்துலயோ கட்டிக் கொண்டு வந்து மானத்தை வாங்கி விட்டானுங்களா?”
“போடா வெங்காயம்… தி.மு.க., காங்கிரசு, பா.ம.க., பா.ச.க., சி.பி.ஐ., பத்தாததுக்கு சில இடங்களில் எதிரணியிலுள்ள அ.தி.மு.க., ம.தி.மு.க. கொடிகூட இருந்துச்சு. அவ்வளவு ஏன் சந்திரலேகாவைத் தவிர வேற உறுப்பினரேயில்லாத சுப்ரமணியசாமி கட்சிக் கொடியைக்கூட ஒருத்தன் தூக்கிப் பிடிச்சிட்டு போராட்டத்துக்கு வந்து ஆட்டம் போட்டிருக்கான். ஆனா பிறவிப் போராளிகளான சி.பி.எம். கொடிகளில் ஒண்ணைக்கூடக் காணோமே. எப்படி? சி.பி.எம். இல்லாம ஒரு போராட்டமா? ஒருவேளை கட்சியைத் தடை பண்ணிட்டாங்க போல… அதனாலதான் போராளிகள் பதுங்கிட்டாங்கன்னு நெனச்சேன். இது ஒரு தப்பா சொல்லு?”
“யோவ், வாயில என்னென்னமோ அசிங்கமா வருது… நீ நெனச்ச மாதிரியே ஒருவேளை சி.பி.எம்மைத் தடை பண்ணியிருந்தாலும் அவுங்க அதுக்கெல்லாம் அஞ்சக் கூடியவங்க கிடையாது. தலைமறைவா இருந்து ‘யு.ஜி.’ங்கிற அண்டர்கிரவுண்ட் பாலிடிக்ஸ் பண்ணியாவது போராடுவாங்க. ஞாபகம் வச்சுக்கோ.”
“தோழா… உணர்ச்சி வசப்படாத. அண்டர்கிரவுண்ட் பாலிடிக்ஸ் பத்தி சொன்னதெல்லாம் ரொம்பச் சரி. ஆனா, அதெல்லாம் நேரு காலத்தோட முடிஞ்சு போன கதையப்பா…. இப்ப அச்சுதானந்தனுக்கு எதிரா பினராயி விஜயன், பினராயிக்கு எதிரா அச்சு, ஜோதிபாசுக்கு எதிரா பட்டாச்சார்யா, பட்டாவுக்கு எதிரா ஜோதி இப்படி கட்சிக்குள்ளாற பண்ற உள்குத்து வேலைகள்தான் அவுங்களோட ஒரே ‘யு.ஜி.’ பாலிடிக்ஸ்.கொஞ்சம் பொறு. போராட்டத்துல சி.பி.எம். ஏன் கலந்துக்கலைன்னு எதாவது சர்வதேச தட்துவ முலாம் பூசி அவுங்களே அறிவிப்பாங்க. அந்தச் செய்தியோட வந்து உன்னை அப்புறமாச் சந்திக்கிறேன்.”
27, ஆகஸ்டு.
“கடைசியில் பூனைக்குட்டி வெளியில் வந்தே விட்டது” என்றபடி சி.பி.ஐ. எம்மின் அதிகாரப்பூர்வ நாளிதழ் தீக்கதிரை எடுத்து என் முன்னால் போட்டான் அழகிரி.
“இன்னைக்கு எழுதியிருக்கிற தலையங்கத்தைப் படிக்கிறேன் கேட்டுக்க….” என்று தீக்கதிரின் தலையங்கத்தின் ஒரு பகுதியை படித்தான் அழகிரி.
கேரளத்தில் ஓணம் பண்டிகை என்பது மிக முக்கியமான கொண்டாட்டம் ஆகும். வெளிநாடுகளிலும், இந்தியாவின் பல பகுதிகளிலும் வசிக்கும் கேரள மாநிலத்தவர் இந்தப் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊருக்கு வருவது வழக்கம். இந்த நேரத்தில் இரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டிருந்தால் அவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியிருப்பார்கள்.“
பாத்தியா உங்க சி.பி.எம்மோட கொள்க விளக்கத்தை… மக்களைச் சிரமத்திற்கு ஆளாக்காத போராட்டம்னு ஏதாவது உண்டா? இல்ல, அப்படியொரு போராட்டத்தை சி.பி.எம். இதுவரைக்கும் நடத்தியிருக்குதா?
இருபத்தஞ்சாம் தேதி மறியல் எடஞ்சல்னா மத்த நாள்ல நடத்தலாம்னுதானே அர்த்தம்?
சரி, மத்த நாள்களில் மட்டும் என்னவாம்! வீட்டுக்குள்ள உக்காந்துருக்கப் பிடிக்காது, எங்காவது போய்ட் தொலைவோம்னு கிளம்புறவங்கதான் இரயில்ல போறவங்களா?
இன்டர்வியூ போறவன், சாகிறதுக்கு முந்தி கடைசியா ஒரு தடவை அப்பனையோ, ஆட்தாளையோ கண்ணால பாத்திடலாம்னு போறவன், அக்கா-தங்கச்சி கல்யாணத்துக்குக் காசு சேத்துக்கிட்டுப் போறவங்கதானே இரயில் பயணிங்க!
மறியல் நடந்தா அவுங்க பாதிக்கப்பட மாட்டாங்களா?
பாதிப்பில்லாம நடத்தணுமுன்னா கூட்ஸ் வண்டியைத்தான் போய் மறிக்கணும்.
ஆனா அதுலகூட உணவுப் பொருட்கள், உயிர் காக்கும் மருந்துகள்னு இருக்குமே? என்ன செய்யறது?
பேசாம இரயில்வே ஷெட்டுக்குள்ளாற கழுவுறதுக்கு கொண்டுபோய் நிறுத்தி வச்சிருக்கிற பெட்டிங்க முன்னால உளுந்து புரண்டு மறியல் செய்யலாமா?
நம்ம ஊர்ல ஒரு பழமொழி சொல்வாங்களே… ‘நோகாம நோம்பு கும்பிடுறது’ன்னு… அது இதுதானோ…!
பாம்பும் சாகக்கூடாது; தடியும் ஒடியக்கூடாது! நல்ல போராட்டம்!
முதலாளிங்களுக்கெதிரா தொழிலாளிகளை மொட்டை அடிச்சு ரோட்டுல ஊர்வலம் வுடுறது, கையில் திருவோட்டுடன் தொழிற்சாலைகளை முற்றுகையிடுவதுன்னு ஒண்ணுக்கொண்ணு புரட்சிகர நடவடிக்கையில் முன்னோக்கிப் பாயும் சி.பி.எம்.மிடமிருந்து இப்படிப்பட்ட மொண்ணைத்தனமான அறிவுரைகள்தான் வரும்னு தப்பா நினைச்சிடக்கூடாது. அதுக்கு அவுங்க எழுதியிருக்குற அடுத்த பாராவையும் கொஞ்சம் படிக்கணும்.. இதோ படிக்கிறேன் பாரு.
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் என் வரதராஜன், டி.கே.ரங்கராஜன் ஆகியோர் முதல்வர் கருணாநிதியைச் சந்திட்து ரயில் மறியல் போராட்டம் குறித்து அவரது கவனத்திற்குக் கொண்டு சென்றார்கள்.
என். வரதராஜனும், டி.கே. ரங்கராஜனும் சி.பி.எம்மின் தலைவர்களா, அல்லது கேரள சமாஜட்தின் சிறப்புப் பிரதிநிதிகளா என்ற சந்தேகம் ஒருபுறம் இருக்கட்டும். போராட்டம் குறித்து கருணாநிதியின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டிய காரணம் என்ன? அவருக்குத் தெரியாமலா, சொல்லாமலா வீரபாண்டி ஆறுமுகம் போராட்டத்தை அறிவித்தார்?
சின்னப்புள்ளத் தனமால்ல இருக்கு.
மறியல்னு சொன்னதும் அவுந்த வேட்டியைக் கட்டிக்கக்கூட நேரமில்லாது கோபாலபுரம் நோக்கி ஓடினவங்க, என்னிக்காவது திருவனந்தபுரம்போய் நல்லவரும், வல்லவருமான அச்சுதானந்தன்கிட்ட சேலம் கோட்டட்தை எதிர்க்காதீங்கன்னு சொன்னாங்களா?
அவ்வளவு தூரம்கூட போக வேணாம், சென்னையில் கேரள டூரிஸட்துக்கு அடிக்கல் நாட்ட வந்தாரே… அப்ப, கூட நின்னு போட்டோவுக்கு போஸ் குடுத்து, சிரிச்சிக்கிட்டு இருந்த நேரத்துல அந்தாளு புத்தியில் உறைக்கிற மாதிரி நாலு வார்த்தை சொல்லியிருக்கலாமே… ஏன் சொல்லலை?”
“எப்படியப்பா சொல்லுவாங்க? சேலம் கோட்டம் வர்றத அவரு எதிர்க்கவேயில்லைன்னு இதோ… தீக்கதிர்லேயே எழுதியிருக்காங்களே?”
“அது சரி, தலித் மக்கள் கண்டிப்பா கோயிலுக்குள்ளாற வரணும்னு சங்கராச்சாரி சொல்லியிருக்கிறாரே உனக்குத் தெரியுமா?”
“யோவ், சேலத்தைப் பத்திப் பேசிக்கிட்டிருக்கப்ப சம்பந்தமில்லாம ஏன் காஞ்சிபுரத்துக்குப் போயிட்ட…”
“சம்பந்தமிருக்குப்பா… நான் கேட்ட கேள்விக்கு மொதல்ல பதில் சொல்லு. தலித் மக்கள் கோயிலுக்கு வரணும்னு சங்கராச்சாரி சொன்னாரா, இல்லியா?”
“அட என்னப்பா நீ, அந்தாளு சொன்னதுல பாதியை விட்டுப்புட்டு மீதியைச் சொல்ற… குளிச்சு சுத்த பத்தமா இருந்தா தலித் மக்களும் தாராளமா கோயிலுக்கு வரலாம்னுதான் அவரு சொன்னாரு.”
“இப்ப சேலம் கோட்டத்தைப் பட்தி அச்சுதானந்தன் சொன்னதுக்கு வர்றேன். கோவை, திருப்பூரு, போத்தனூரு, மேட்டுப்பாளையம் பகுதிகளை தொடர்ந்து பாலக்காடு கோட்டட்துல வச்சிருக்கிறதாயிருந்தா அவரு சேலம் கோட்டம் வர்றத ஆதரிப்பாராம். இதுதான் அவரு டெல்லியில சொன்னது. இந்த முன்னாள் புரட்சியாளருங்க அந்தாளு பேச்சின் பின்பாதியை கிழிச்சு அவுங்க சூத்தாம்பட்டைக்கடியில வச்சுக்கிட்டு, முன்பகுதியை மட்டும் சொல்லி அச்சுதானந்தனுக்கு ஒளிவட்டம் சுத்துறாங்க..
.ஒண்ணு மட்டும் புரிஞ்சுக்க, இந்த மாதிரி மொள்ளமாறித்தனமா வெட்டி, ஒட்டி எழுதினா சங்கராச்சாரியை புரட்சிக்காரனாவும், பெரியாரை கடைந்தெடுத்த மத அடிப்படைவாதியாகவும் ஒரே நொடியில் மாத்த முடியும்.
சுருக்கமாச் சொன்னால் இந்து என்.ராம், சோ, ரவிக்குமார் வகையறாக்களின் வரிசையில் இப்ப இவங்க…”
“எழுத்தாளனுங்க கதய வுடு. அப்படித்தான் இருப்பானுங்க. இவங்க கம்யூனிஸ்டுகளாச்சே. இருக்குற எடத்துக்குன்னு கொஞ்சமாவது விசுவாசம் காட்ட வேணாமா? இவங்க உண்டியல்ல போட்ட காசுக்கு நாலு பொறை வாங்கி நாய்க்குப் போட்டிருந்தா அது நமக்கு நன்றியோட வாலையாவது ஆட்டியிருக்குமே”
“உணர்ச்சி வசப்படாத தோழா. அவங்க கம்யூனிஸ்டுங்கதான்; சி.பி.ஐ. (எம்)தான். ஆனா, நீங்க எல்லோரும் நெனக்கிற மாதிரி ‘எம்’ன்னா ‘மார்க்சிஸ்ட்’ அப்படின்னு அர்த்தம் கெடையாது. ‘மலையாளீஸ்’னுதான் பொருள்.”
“ஏம்ப்பா… இந்தப் பட்டம் ரொம்ப ஓவருப்பா…”
“ஓவரா, இல்லியான்னு அப்புறம் சொல்லு. போன வருசம் மங்களூர் போற வெஸ்ட் கோஸ்ட் வண்டிய கோவைக்கு வராம ரூட்டை மாட்தி கொண்டு போயிட்டானுங்க. உடனே கோவை ராமகிருஷ்ணன், பெரியார் திராவிடர் கழக ஆளுங்க எல்லாம் சேந்து தினமும் அபாயச் சங்கிலியைப் புடுச்சு இழுத்து நிப்பாட்டி இரயில்வே போலீசிடம் அடிபட்டு, மிதிபட்டு கடைசியா அந்த வண்டிய கோவைக்கு வர வச்சாங்க. அப்ப ‘மார்க்சிஸ்ட்’ என்ன பண்ணிச்சு தெரியுமா?”
“இப்ப பண்ணுன மாதிரி அப்பவும் அதுல கலந்துக்கலையா?”
“அதுகூட பரவாயில்லப்பா… ரூட்டை மாட்தி வண்டியை விட்டதால் அஞ்சு லட்ச ரூபாய் கலெக்ஷன் அதிகமாயிடுச்சுன்னு தீக்கதிர்ல ஒரு கள்ளக்கணக்கை செய்தியா எழுதிப் போட்டு நம்ம ஆளுங்க முதுகுல குட்துனாங்க. இப்ப சொல்லு இவங்க மார்க்சிஸ்டா, மலையாளிஸ்டா?”
“இப்ப இருக்குற பாலக்காடு கோட்டமே அப்ப நம்ம தமிழ்நாட்டு போத்தனூர்லதான் இருந்ததுன்னு சொல்றாங்க. அதை பாலக்காட்டுக்கு மாட்துறப்ப நம்ம ஆளுங்க காட்டுன பெருந்தன்மை ஏன் மலையாளிங்கக்கிட்ட இல்லாமப் போச்சு?”
“யோவ், சும்மா வாயைக் கிளறி வாங்கிக் கட்டிக்காத. நாமளா விருப்பப்பட்டு கொடுத்தாத்தான் அது பெருந்தன்மை. ராவோட ராவா அவன் கடட்திக்கொண்டு போயிருக்கானா அதுக்குப் பேரு களவாணிட்தனம். அத ஏன்னு கேக்க வக்கத்துப் போய் இங்க இருந்தானுங்க பாரு நம்மாளுங்க… அது கையாலாகாட்தனம். பெருந்தன்மை அது, இதுன்னு சொல்லி நம்மாளுங்களுக்கு முதுகு சொறிஞ்சு விடுறத மொதல்ல நிப்பாட்டு.
1956 இல் தந்தை பெரியார் வச்ச கோரிக்கைதான் இந்தச் சேலம் கோட்டம். தமிழ்நாட்டுப் பகுதிகள் தமிழ்நாட்டுக் கோட்டத்துக்குள்தான் இருக்கணும்கற இனவாத சிந்தனையெல்லாம் இதுக்குக் காரணமில்லை. தமிழ்நாட்டைச் சுரண்டி அவன் மட்டும் அனுபவிக்கிற கொடுமை தாங்காமத்தான் இந்தச் சேலம் கோட்ட திட்டமே உருவாச்சு.”
“ஜோலார்பேட்டை தொடங்கி கோவை வரையுள்ள ரெயில் நிலையங்களை கொஞ்சம் நினைச்சுப் பாரு. பல ரெயில் நிலையங்களில் குடிக்க மட்டுமில்ல, குண்டி கழுவக்கூட தண்ணி கிடையாது. திருப்பூரில் மழை வந்தா ஒதுங்கி நிக்க ஒழுங்கா ஒரு பிளாட்பாரம் கிடையாது. ஆனா, அதே கோட்டத்துல பாலக்காட்டிலிருந்து குட்டிபுரம்கிற துளியூண்டு ஊரு வரை தாஜ்மஹால் கணக்கா கட்டுமானம் பண்ணி, அழகுபடுத்தி வச்சிருக்காங்க. இனி அடுத்த தடவை உலக அதிசயங்களுக்கு பட்டியல் போட்டா மதுரை மீனாட்சி அம்மன் கோயிலோடு பாலக்காடு, குட்டிபுரம் நிலையங்களையும் லிஸ்டில் சேர்த்து விடலாம்.
சம்பாதனை இங்கிருந்து! சுகபோகம் அங்குள்ளவர்களுக்கு.
சாதாரண பாசஞ்சர் வண்டிகள் விடும் அதிகாரம் கோட்டத்திற்கு உண்டு. இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி பாலக்காட்டை மையமாக வைத்து ஏகப்பட்ட பாசஞ்சர் வண்டிகள் ஓடுது. அதில் பட்தில் ஒரு பங்கு வண்டிகூட கோவைக்கு, திருப்பூருக்கு இல்லை.
கோவையிலிருந்து நாகர்கோவிலுக்கு அறிவிக்கப்பட்ட விரைவு வண்டி இன்னும் விடப்படவில்லை. கேட்டால் பெட்டிகள் கைவசம் இல்லையாம். ஆனா திருவனந்தபுரத்துக்கு ஒரு தினசரி வண்டி, வாரம் ஒருமுறை வண்டி, மங்களூருக்கு பாலக்காடு வழியாக வாரம் மூன்று முறை வண்டியெல்லாம்…. எப்போதோ ஆரம்பித்து ஓடிக் கொண்டிருக்கின்றன. அனேகமா லாலு பாராளுமன்றத்தில் இதை அறிவித்துக் கொண்டிருக்கும்போதே பிளாட்பாரங்களில் பெட்டிகளைக் கொண்டுபோய் நிப்பாட்டியிருப்பார்கள்.
பெங்களூரிலிருந்து கோவை வரை வந்து கொண்டிருந்த இன்டர்சிட்டியை எர்ணாகுளம் வரை நீடித்தார்கள். மீட்டர்கேஜ் காலட்தில் சென்னையிலிருந்து மதுரை வரை சென்று கொண்டிருந்த கூடல் விரைவு வண்டியை- அதைவிட இன்னொரு மடங்கு அதிக தூரம் நீடிட்து குருவாயூர் வரை கொண்டு போனார்கள். சென்னை எழும்பூரிலிருந்து கரூர் வழியாக ஈரோடு வரை சென்று கொண்டிருந்த வண்டியை கோவை வரை நீடிட்தவர்கள் கடைசியில் அதை மங்களூர் வரை இழுத்து விட்டார்கள்.”
“ஒரு வண்டி அதிகமான தூரம் வரை பயணிப்பது நல்லதுதானே?”
“நிச்சயம் நல்லதுதான்.நமக்கல்ல, மலையாளிகளுக்கு.சந்தேகமிருந்தா நான் இங்கே குறிப்பிட்ட வண்டிகளில் நல்ல வசதியாக உட்கார்ந்தும், படுத்துக் கிடந்தும் போகிறவர்கள் யார் என்று போய்ப் பாரு. மலையாளத்து சேச்சிகளும், சேட்டன்மார்களுமாகத்தான் இருக்கும்.”
“அப்ப நம்மாளுங்க?”
“ஜெயலலிதா வேனில் எஸ்.டி.எஸ். தொங்கிக் கொண்டு போனாரே… நினைவிருக்கிறதா? அதுபோல் பதிவு செய்யப்படாத பெட்டிகளில் தொங்கிக் கொண்டும், விழுந்து வாரிக்கொண்டும் போவார்கள் நம்மாளுகள்.
கோவைக்கும் – இருகூருக்குமிடையில் உள்ள 17 கிலோ மீட்டர் ரெயில்பாதை சேட்டன்களின் உதாசீனத்தால் இன்னமும் முடிக்கப்படாமல் இழுத்துக் கொண்டு கிடக்கிறது.
‘என்னய்யா காரணம்?’னு கேட்டா ‘பாறை உடைக்குறது கஷ்டமாயிருக்கு. லேட்டாதான் வேலை ஆவும்’னு மந்திரி வேலு வாயால சொல்ல வைக்கிறாங்க.
இதைவிட கஷ்டமான பாம்பன் பால வேலையை ஒரே வருடத்தில் முடிச்சு வண்டியும் வுட்டாச்சு. இருகூரில் பாறையப் புடுங்கறது அவ்வளவு பெரிய கஷ்டமா?ன்னு கேக்க நம்ம ‘பாட்டாளி’ மந்திரிக்கு துப்பில்லை.”
“இதையெல்லாம் பேசிட் தீத்துக்கலாமுன்னு அச்சுவும், அவரோ தமிழ்நாட்டு சகபாடிகளும் திரும்பத் திரும்ப சொல்லிக்கிட்டேயிருக்கிறாங்களே…”
“என்னத்தப் பேசறது?
கோட்டம் வேணாமுன்னு அச்சு சொல்வார்.வேணுமுன்னு கலைஞர் சொல்வார்.
அப்படின்னா கோவையும், திருப்பூரும் பழையபடி பாலக்காட்டிலேயே இருக்கட்டும்பார் அவர்.
அது ஆவுறதில்லை என்பார் இவர்
.ரெண்டு வருசம் இப்படியே பேசிக் கொண்டிருப்பார்கள்.
அப்புறம் அதிகாரிகள் மட்டட்தில் இதே திரைக்கதை – வசனங்களுடன் பேச்சு தொடரும்.
கொஞ்ச நாளில் அதுவும் சலித்துப்போய் லொக்கேஷனை மாற்றுவார்கள்
.திருவனந்தபுரம், சென்னை… அப்புறம் ரெண்டு பேருக்கும் பொதுவா டெல்லி.
இதற்கிடையில் நம்ம ‘அச்சு’வுக்கு கேரள வாக்காளர்கள் ‘பிரிவு உபச்சார விழா’ நடத்திவிட்டால் புதிதாக வரும் அந்தோணியுடனோ, சாண்டியுடனோ பழையபடி ஆரம்பித்த இடத்திலிருந்து ஷூட்டிங் தொடங்கும்.
காவிரித் தண்ணிக்குப் பேசிப் பேசியே சங்கு ஊதியதை பக்கத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்களல்லவா?அதனால்தான் நாக்கை சப்பு கொட்டிக்கொண்டு இந்த உதவாக்கரை திட்டத்தை கையிலெடுத்துக் கொண்டு ‘பேசலாம் வா’ என ஜாடை காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
”திட்டமிட்டபடி சேலம் கோட்டம் ஆரம்பிக்கப்படுமா?
படலாம்.
கூடவே ‘வெஸ்ட் கோஸ்ட் இரயில்வே’ என்ற பெயரில் அவர்களுக்கு ஒரு மண்டலம் ஆரம்பிக்க அறிவிப்பும் வரலாம்.
ஒரு மண்டலத்துக்கு நான்கு கோட்டங்கள் வேண்டுமாம்.
கர்நாடகத்திடம் போய் கேட்க முடியாது. காலில் போட்டிருப்பதை கையில் எடுட்து விடுவான்.
அப்புறம் கோட்டத்துக்கு வழி?
‘பெருந்தன்மை’ மிக்க நாமிருக்க, அவர்களுக்குப் பயமேன்?
கோட்டமாகப் பிரிந்த சேலம், மண்டலமாக பழையபடி மலையாளிகள் கையில் போய்விடும்
.வாழ்க ‘மார்க்சிஸ்டுகளின்’ தேசிய ஒருமைப்பாடு! சமூக விழிப்புணர்வு
ஒக்ரோபர் 2, 2007
Posted by தீஸ்மாஸ் டி செல்வா under
திரைப்பட விமர்சனம்
1 பின்னூட்டம்
திஸ்மாஸ் டி செல்வா
‘அட இப்படிக் கூட நடக்குமா?
’‘நடந்து விட்டதப்பா….’‘
ரொம்ப நல்ல பயலாச்சே!
’‘எல்லாம் வேஷம்’
கன்னத்தில் கை வைத்தபடி சுப்பிரமணியன் குடும்பமே தெருவில் உட்கார்ந்திருந்தது.
‘ஈபி காலையிலேயே வந்து ‘பீஸை‘ புடுங்கிக் கொண்டு போய்விட்டானாம்.
காரணம்?‘
கரண்ட் பில் கட்ட வைத்திருந்த பணம் ஆயிரத்து ஐநூறையும் அப்படியே ‘லபக் கொண்டு ‘சிவாஜி படம் பார்த்து விட்டு வந்திருக்கிறான் அவனுடைய சீமந்தப் புத்திரன்.
‘எங்களை இருட்டுல படுக்க வச்சது கூடப் பரவாயில்லப்பா… பெத்த பாவத்துக்கு அனுபவிச்சுதான் தீரணும். குடித்தனம் இருக்கிறவங்க என்ன பண்ணாங்க? ஒவ்வொருத்தரும் கேக்குற கேள்விக்கு என்ன பதிலச் சொல்வேன்?’
பயலை செமத்தியாகக் கவனித்திருப்பான் போலிருக்கு.
சுருண்டு படுத்திருந்தான்.
‘ டேய் குமாரு… எழுந்திருடா. ..’
அசையவில்லை.
‘தம்பி ரஜினி குமாரு.. எழுந்திருப்பா செல்லம்’
ம்ஹீம்…! எழுந்திருக்க முயன்றான். முடியவில்லை.
வாங்கிய அடி அப்படி…
‘ பொறுக்கி குமாருன்னு கூப்புடு. அதுதான் அவனுக்கு சரியான பேரு’
‘அட சும்மாயிருக்க மாட்டியா சுப்பிரமணி. இரண்டுக்கும் அர்த்தம் ஒண்ணுதான்.’
எப்படியோ கஷ்டப்பட்டுத் தூக்கி ரஜினியை உட்கார வைத்தோம்.
சினிமாவில் அடி வாங்கிய வில்லனைப் போல் முகம் வீங்கிப் போயிருந்தான்
.‘நடந்தது நடந்து போச்சு. இனிமே இப்பிடி ஒரு தப்பை கனவிலயும் நினைக்காத. அப்பன் சம்பாத்தியத்தில படிக்கிற பய நீ திருட்டுத்தனமா சினிமாவுக்குப் போனதே தப்பு. இந்த லட்சணத்துல ஒரு கும்பலையே கூட்டிட்டுப் போயி கரண்டு பில்லுக்குக் கட்ட வேண்டிய காசை காலி பண்ணியிருக்குற…’
சுப்பிரமணி பொங்கியெழுந்தான்
.‘நல்லா கேள்வி கேக்குற போ… இருக்குற இருப்பில கும்பல் வேறயா? இவன் ஒரு ஆளே ஆயிரத்து ஐநூறுக்கும் படம் பாத்துட்டு வந்திருக்கான். ’
திடுக்கிட்டேன். ‘எத்தனை படமெடா?’‘
அட… ஒரே படம்தாம்பா...
’‘என்ன அக்குறும்புடா இது.. ஒரே ஆளுக்கு ஒரு படத்துக்கு ஆயிரத்து ஐநூறா? ஏண்டா இப்பிடி ‘பிளாக் வாங்கிப் பாக்கலேன்னா வானம் இடிஞ்சு உன் தலையில விழுந்திடுமாகொஞ்சம் சீக்கிரமாப் போய் லைன்ல நின்னு கவுண்டர்லகூட வாங்கியிருக்கலாமே...
’‘யோவ்… நெசமாவே நீ இந்த ஊர்லதான் இருக்கியா? சுத்த வௌரங்கெட்டவனா பேசிக் கிட்டிருக்குற… டிக்கெட்டை ஆயிரத்து ஐநூறுக்கு வித்தது பிளாக்குல இல்ல… கவுண்டர்ல தானாம்.’
‘ இதென்ன பகல் கொள்ளை? இன்ன விலையில தான் டிக்கெட்டை விக்கணும்னு அரசாங்கமே சொல்லியிருக்கு. இப்படி இருபது மடங்கு, முப்பது மடங்கு ஏத்தி வித்ததை போலீசு கண்டுக்கலையா?’
‘ரஜினி கலைஞரைக் ‘கண்டுகிட்டதால் போலீசு இவங்களைக் ‘கண்டுக்கல
‘சிவாஜி படத்தின் வெற்றிக்கு நீங்க எந்த அளவு காரணமாக இருந்திருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும், நன்றி அய்யா என்ற ரஜினியின் மேடைப் பேச்சை படித்திருந்தால் இந்தக் கேள்வியை நீ கேட்டிருக்க மாட்ட…’
கிளம்பத் தயாரானேன் .
‘ஒம் பையன நான் என்னமோ நெனச்சேன். அவன் உண்மையிலேயே ரொம்ப நல்லவன்தான். அதனாலதான் கரண்டு பில்லு காசை மட்டும் எடுத்திட்டு தனியா படத்துக்குப் போயிருக்கான். ப்ரெண்டுகளையும் சேத்துக்கிட்டிருந்தான்னா வீட்டுப் பத்திரத்தை மார்வாடி கடையில கொண்டு வச்சிதான் படத்தைப் பார்த்திருப்பான். நல்ல வேளை நீ தப்பிச்ச.’
அண்மையில்தான் அந்த அதிசயம் நடந்தது.
பாலாறு, பெரியாறு, டாஸ்மாக், டான்சி அனைத்திலும் இரு துருவங்களாக இருந்த திராவிட இயக்கத் தலைமைகளை ஒரே துருவமாக்கி ஒன்றாக்கியது ஒரு மூன்றெழுத்து மந்திரம்.
அது மட்டுமா?
ஒரு துருவத்தின் இரு வேறு துருவங்களான கோபால புரத்தையும், பழைய ஆலிவர் சாலையையும் ஒன்றாக்கியது அந்த மந்திரம்.
அந்த மந்திரம் ‘ரஜினி என்று சொல்லவும் வேண்டுமோ!
சப்பானியர்களே சாமியாடும்போது உள்ளூர் ரசிகர்கள் சும்மாயிருக்க முடியுமா?
என்னதான் பெரிய பதவியில் இருந்தாலும் அவர்களும் மனிதர்கள்தான். யாரோ ஒருத்தருக்கு ரசிகர்கள்தான்.
பதவி வரும், போகும். ரசிகர் பட்டமோ நிரந்தரம்.
அதனால்தான் வங்கக் கடலில் கொத்து கொத்தாக மீனவர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டபோது நகராத கால்கள் ‘குட்லக் பிரிவியூ தியேட்டருக்கு விரைந்தோடின.
‘ தூங்கவே நேரமில்லை என்றவர்கள் மூன்றரை மணி நேரம் ஒரு இருட்டுக் கொட்டகையில் தேவுடு காத்தார்கள் .
‘ஆகா…!’ என வியந்தார்கள்.
‘பிரமாண்டம்!’ என புகழ்ந்தார்கள்
.போஸ்டர் ஒட்டவில்லை. அது குனிந்து நிமிர முடியாத முதுமையால்.
பாலாபிஷேகம், பீர் அபிஷேகம் செய்யவில்லை. அது பகுத்தறிவுப் பாசறையிலிருந்து வந்து தொலைத்து விட்ட ஒரே காரணத்தால்.
மற்றபடி எல்லாம் இனிதே நடந்தேறின.
போணியாகாத பங்குகளை திடீரென்று அதிக விலைக்கு வாங்கி செயற்கையாக அதற்கு ஒரு விலை மதிப்பை உருவாக்கும் பங்குச் சந்தை சூதாடிகள் போல் தொலைக்காட்சி உரிமம் நான்கு கோடிக்கு வாங்கி சிவாஜியின் ‘கிரேடு உயர்த்தப்பட்டது.
பெட்டிக்கடை, டாஸ்மாக் இந்த இரண்டையும் தவிர அநேகமாக எல்லா இடங்களிலும் சிவாஜி.
ஊடக முதலாளிகள் ஊக வணிகர்களாக மாறினார்கள்.
‘படம் பார்க்க வர்றியா, இல்லியா? என ஒவ்வொரு வீட்டிலும் புகுந்து கழுத்தில் துண்டைப் போட்டு தியேட்டருக்கு இழுக்காததுதான் குறை.
முந்தானை முடிச்சைப் பார்த்து வீட்டைச் சுற்றி முருங்கை மரம் வளர்த்த அறிவாளிகளின் அடுத்த தலைமுறை இத்தனைக்குப் பிறகும் எப்படித் தாக்கு பிடிக்க முடியும்?
அப்பனின் சம்பளத்தையோ, ஆத்தாளின் தாலியையோ அறுத்துக்கொண்டு ஓடினார்கள்.
வியர்வையில் குளித்து, லத்தியால் அடி வாங்கி, வேட்டியைப் பறிகொடுத்து ‘வணக்கம் போட்ட பின் வெளியேறினார்கள்.
‘பத்திரிகையில ஆயிரம் எழுதுவான். என்ன விலைக்கும் டிக்கெட் விப்பான். நமக்குப் புத்தி வேணாமா…’ என்கின்றன நடுத்தர வர்க்கமும், அறிவு ஜீவிக் கும்பலும்.
வழிப்பறிக்காரனிடம் பணத்தைப் பறிகொடுத்தவனை குற்றவாளிபோல் விசாரிக்கும் போலீஸ்காரனாய் சாதாரண மக்கள்மீதே விரல் நீட்டுகின்றன.
புத்தி வேணும்தான்!
ஆனால், அது படம் பார்த்த இவனுக்கு மட்டுந்தானா?
எடுத்தவனுக்கில்லையா?
திருட்டு சிடி பார்ப்பது குற்றம்தான். ஆனாலும் தயாரித்தவனை மட்டுந்தானே போலீசு நோண்டி நொங்கெடுக்குது.
கள்ளச்சாராயம் குடித்தவன் ஆஸ்பத்திரிக்குப் போனால், அதை காய்ச்சி விற்றவன் ‘லாக்அப் போகிறானே !
ஆளுக்கொரு தண்டனை அறிவிக்க… இது என்ன நவீன மனுநீதியா?
அதிசயம்.
ஆனால் உண்மைதான்.
சினிமாக் கொட்டகைகளை கள்ளப்பணம் புழங்கும் சந்தைகளாக மாற்றிய ஒரு கும்பல் கள்ளப் பணம் ஒரு தேச விரோதச் செயல் என படமெடுத்திருக்கிறது.
திருடனாக இருந்த வால்மீகி இராமாயணம் எழுதியதைப் போல் என்றும் இதைச் சொல்லிவிட முடியாது.
வால்மீகி திருட்டிலிருந்து விடுபட்ட பின்பே கதை எழுதியதாக கதை.
இவர்களோ ‘தொழிலில் இருந்து கொண்டே அந்தத் தொழிலுக்கு எதிராக கதை எழுதுகிறார்கள்.
‘கள்ளப்பணம் வைத்திருக்கும் எவனும் அதை ஒழுங்காக கணக்குக் காட்டி ஒப்படைக்கச் சொன்னால் செய்ய மாட்டான்.கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்தால் தானே வெளியேவரும்’ என்ற ஷங்கரின் புரட்சிகரச் சிந்தனை நமக்கு புல்லரிப்பை ஏற்படுத்துகிறது
.‘பூர்ஷ்வா கும்பலுக்குள் இப்படியொரு பாட்டாளி வர்க்கச் சிந்தனையாளர்களா?
இந்தப் புல்லரிப்பையும் தாண்டி நமக்கு எழுகிறது வேறொரு கேள்வி.
“ முத்து படத்திற்குப் பின் ரஜினியிடமும், அந்நியனுக்குப் பின்ஷங்கரிடமும் கைப்பற்றப்பட்ட கோடிகள் வருமான வரி அதிகாரிகள் கேட்டவுடனேயே ஒத்துக் கொண்டு கொடுத்தவையா?
அல்லது, ‘கவனித்த பிறகு கக்கியவையா?
இல்லை, ‘சிவாஜி வருவது போல் டங்குவார் தெறிக்க கும்மாங்குத்து விழுந்த அதிர்ச்சியில் ஆடிட்டர்கள் ஆள்காட்டிகளாக மாறிப்போன அவலத்தினாலா?
எப்படி ஷங்கர்? எப்படி?
அமெரிக்காவில் மென்பொருள் துறையில் சம்பாதித்த இளைஞன் தமிழ்நாடு திரும்பி மருத்துவப் பல்கலைக்கழகத்தையும், பொறியியல் கல்லூரியையும் இலவசமாக நடத்த முயற்சிப்பது தான் ‘சிவாஜி படத்தின் கதை.
நிஜ வாழ்க்கையில் சம்பாதிப்பதை கல்யாண மண்டபமாகவும், நட்சத்திர விடுதிகளாகவும் முதலீடு செய்பவர்கள் சினிமாவில் மட்டும் கல்வி வள்ளலாக வேடம் கட்டும் முரண்பாடு ஒருபுறம் இருக்கட்டும். அமெரிக்காவில் கோடிகோடியாகச் சம்பாதித்தப் பணம் மட்டுமே பொறியியல், மருத்துவப் பல்கலைக் கழகங்களை உருவாக்கப் போதுமா?
வேலை நேரம் போக ஓய்ந்த நேரங்களில் அங்குள்ள வங்கிகளைக் கொள்ளையடிக்காமல் இது எப்படிச் சாத்தியமாகும்?
‘ஜென்டில்மேன் தொடங்கி ‘சிவாஜி வரை கல்வி என்றாலே பொறியியல், ஐ.ஐ.டி. என்று உயர்தர படிப்புகள் மட்டுமே இவர்கள் கண்ணில் தெரியும் மர்மம் என்ன?
ஓராசிரியர் பள்ளி, கரும்பலகை இல்லா பள்ளி, கட்டடமில்லாமல் மரத்தடியில் நடக்கும் பள்ளி இங்கெல்லாம் அமெரிக்க என்.ஆர்.ஐ.களின் கடைக்கண் பார்வை ஏன் பட மாட்டேன்கிறது?
பஞ்சாயத்துப் பள்ளியில் ரஜினியைப் படிக்க வைப்பது சாத்தியமில்லை என்றோ, விவரணப் படம் போலவோ மாறிவிடும் அபாயமிருக்கிறது என்றோ இவர்கள் கதைக்கலாம்.
உண்மைக் காரணம் அதுவல்ல.
‘அமெரிக்காவில் நம்மவர்களுக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு’, ‘நம்மவர்கள் அங்கே கணினி துறையில் கொடி கட்டிப் பறக்கிறார்கள்’ என்ற அதீதப் புளுகு மூட்டைகளின் பின்னாலிருக்கும் நிஜ உலகத்தைப் பலரும் பார்ப்பதில்லை.
தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி ஒருபுறம்; இந்தியர்களோடு ஒப்பிடுகையில் அமெரிக்கர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய ஐந்து மடங்கு, பத்து மடங்கு சம்பளம் இன்னொருபுறம். இந்த இரண்டுமே இங்குள்ளவர்களின் தேவையை அங்கு அதிகப்படுத்தியிருக்கிறது.
சுருக்கமாகச் சொன்னால் இங்கிருந்து அமெரிக்கா நோக்கிப் பறக்கும் ஒவ்வொரு கணினி புலியும் அங்குள்ள தொழிலாளிகளின் வயிற்றிலடிக்கும் கருங்காலிகளாகவே புறப்பட்டுப் போகிறார்கள்.
இப்படிப்பட்ட கருங்காலிகளை உருவாக்கி அனுப்பி வைக்கிற கங்காணிகள்தான் ஜேப்பியார், விசுவநாதன், ஏ.சி. சண்முகம், என்.ஆர்.ஐ. சிவாஜி போன்றோர்.
உலகின் மொத்த கணினி மென்பொருள் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு வெறும் இரண்டு சதவிகிதம் என்பதும், இன்னமும் அமெரிக்காவின் பங்கு எண்பத்தைந்து சதவிகிதத்திற்கு மேல் நீடிப்பதும் இந்த உண்மையை மேலும் புரிந்து கொள்ள உதவும்.
‘மேலும் சில ஐ.ஐ.டி.கள், அதில் மேலும் அதிக இடங்கள் இவையெல்லாம் நமது மத்திய மந்திரி கொடுத்த உத்தரவாதங்கள்.
இந்த உத்தர வாதங்கள் இவருக்கு ஓட்டு போட்ட நாட்டு மக்களுக்கு அல்ல;
விருந்தினராகவும் வியாபாரியாகவும் கொஞ்ச நாட்களுக்கு முன்னால் இங்கு வந்து போனாரே… பில்கேட்ஸ் என்பவர், அவரிடம்.
இப்போது புரிகிறதா? கோடிக்கணக்கில் சம்பாதித்த என்.ஆர்.ஐ. சிவாஜி எதற்காக இங்கே ஓடி வந்திருக்கிறார் என்பது.
பணமிருப்பவன்தான் படிக்க முடியும் என்ற நிலை தனியார் சுய நிதிக் கல்லூரிகளால் ஏற்பட்டது.
அதற்குத் தீர்வு அந்தக் கல்வி நிலையங்கள் அரசுடைமை ஆக்கப்படுவதில்தான் சாத்தியப்படுமே தவிர, இன்னொரு தனியார் அத்துறையில் நுழைவதால் பெரிதாக என்ன கிழித்து விட முடியும்?
அரசு நிறுவனங்களில் தரமில்லை என அவதூறுகளை அள்ளி வீசும் தனியார்மய தாசர்கள் பொறியியல், மருத்துவம் படிக்க தங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம், சென்னை மருத்துவக் கல்லூரி போன்ற ‘தரங்கெட்ட அரசுக் கல்லூரிகளை தேர்வு செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்களே… என்ன காரணம்?
ஆறரை கோடி மக்களைக் கொண்ட ஒரு தேசத்தில் என்.ஆர்.ஐ. சிவாஜியால் அதிகபட்சம் எத்தனை பேருக்கு, எத்தனை வருடங்களுக்கு இலவசக் கல்வி கொடுக்க முடியும்?
கொண்டு வந்த காசை எல்லாம் கட்டடங்களுக்கும், மாமூலுக்கும் செலவழித்தபின் பல்கலைக் கழகங்களை நடத்தவும், சம்பளம் கொடுக்கவும் நம்ம என்.ஆர்.ஐ. சிவாஜியிடம் ஏது துட்டு?
ஒன்று, துண்டேந்த வேண்டும்.
அதற்கு அவரது கவுரவம் இடம் கொடுக்காது.
அல்லது கல்லூரியின் பெயரோடு ஒட்டிக் கொண்டிருக்கும் ‘இலவசம் என்ற சொல்லை எடுத்து விடவேண்டும்.
எதைச் செய்வார்?கதையில் இப்படியொரு ‘லாஜிக் இடிப்பதை கவனிக்கவில்லையா ஷங்கர்?
நிச்சயம் கவனித்திருப்பார்.
இலவசக் கல்வி என்று ஆரம்பிக்கும் திட்டங்களெல்லாம் கடைசியில் பணம் பிடுங்கும் சுயநிதி கல்லூரி நிறுவனங்களாகத்தான் மாறும் என்பதால் அப்படியே விட்டிருப்பார்.
இப்படி முன் யோசனை கொஞ்சமும் கூட இல்லாத என்.ஆர்.ஐ. சிவாஜி பாதியிலேயே ‘கடை விரித்தேன்; காசில்லை, கட்டி விட்டேன் என பழைய கி.ஆ.பெ. விசுவநாதம் கட்சியை கலைத்துக் கொண்டு போனது போல் விட்டு விட்டு ஓடினால் கல்லூரிகளை எடுத்து நடத்த அரசுதானே வரவேண்டும்!
சர்வீஸ் மைன்ட்டுடன் பல்கலைக்கழகம் நடத்த வந்த என்.ஆர்.ஐ. சிவாஜியை அரசு அதிகாரிகள் அலைக்களிப்பதை, அவமானப்படுத்துவதை கல் நெஞ்சும் கரைய சித்தரிக்கும் ஷங்கர் சுஜாதா ரஜினி கூட்டணி தன் நாட்டுக்கு சேவை செய்து பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த வரும் பொறியாளர்களை, மருத்துவர்களை, மேதைகளை கொஞ்சம்கூட மதிக்காமல் நட்ட நடு சாலையில் வெயிலென்றும், மழையென்றும் பாராது மணிக்கணக்கில் நிறுத்தி அசிங்கப்படுத்துகிறதே அமெரிக்கத் தூதரகம்…
அதை அவமானமாக என்றேனும் எண்ணிப் பார்த்திருக்கிறார்களா?
‘கணினி மேதை என்கிற கருங்காலிகளை விட்டுத் தள்ளுங்கள். சக போட்டியாளர் கமல்ஹாசன், ஹாசன் என்ற முஸ்லீம் சாயல் கொண்ட பெயருக்காகவே நியூயார்க் விமான நிலையத்துக்குள் சுற்றி வளைக்கப்பட்டாரே!
தலைமுடி நீளமாக இருந்ததால் தீவிரவாதி என்ற சந்தேகத்தோடு விசா கேட்டுப் போன நடிகர் ஆர்யா விசாரிக்கப்பட்டாரே…!
ஒரு வசனமாகவேனும் இந்த இழிவை எடுக்கும் படங்களில் பதிவு செய்ய முடியுமா?
முடியாது .
நமக்கு ஆண்டையாகவும், அமெரிக்கனுக்கு அடிமையாகவும் இருக்கும் பார்ப்பன பார்ப்பனிய அடிவருடிக் கும்பல் நிச்சயமாக செய்யாது
.‘படத்தில் நல்ல விசயங்களே இல்லையா?’
நிறைய இருக்கிறது.
கே.ஆர். விஜயாவோடும், கே.பி. சுந்தராம்பாளோடும் ஜோடி போட வேண்டிய வயதிலுள்ளவர் தன் மகளை விட சின்னப் பெண்ணான ஸ்ரேயாவிடம் ‘சில்மிஷம் செய்திருப்பது.
‘இருபது வயது வாலிபனாக ரஜினி வருகிறாராமே?’
ஒரு சின்ன திருத்தம்.
இருபது வயது வாலிபனாக அல்ல, இருபது வயது குறைந்த ஒருவராக வருகிறார்.
அதாவது தாத்தா போலிருந்தவர் அப்பா மாதிரி இருக்கிறார்.
இப்படி மெனக்கெட்டதற்குப் பதில் கதாநாயகி ஸ்ரேயாவின் டோபாவில் கொஞ்சம் வெள்ளைச் சாயம் பூசியிருந்தால் செலவுக்குச் செலவும் மிச்சம், ஜோடிப் பொருத்தமும் ‘ஓஹோ என்றிருந்திருக்கும்.
தனது அடுத்த படத்தில் ரஜினி இந்த யோசனையை நடைமுறைப்படுத்துவதன் மூலம் செலவைக் குறைத்து தனது சம்பளத்தில் இன்னும் பல லட்சங்களைக் கூட்டலாம்.
‘பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா போன்றவர்களை ஒரு கோமாளிபோல் ஆக்கிவிட்டார்களே…’
உண்மையைச் சொன்னால் பட்டிமன்ற மேடைகளிலும் இவர்கள் கோமாளிகளாத்தான் இருக்கிறார்கள்.
இயக்குநர் ஷங்கர் இவர்கள் விசயத்தில் பாத்திரம் அறிந்துதான் பிச்சையிட்டிருக்கிறார்.
இதில் கவலைக்குரிய விசயம், நமது பேராசிரியப் பெருமக்களின் சினிமா மோகம் தொடர்ந்து அதிகரித்து வருவதுதான்.
லூஸ் மோகன், ஓமகுச்சி நரசிம்மன், குமரிமுத்து போன்ற மாபெரும் நகைச்சுவை நடிகர்கள் பேராசிரியர்களின் படையெடுப்பால் கதி கலங்கி போயிருப்பதாக நம்பகமானத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘படத்தில் ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் கிளைமேக்ஸ் ரொம்பப் புரட்சிகரமா இருப்பதை ஒத்துக்கிறீங்களா?’
கண்டிப்பாக ஒத்துக்கிட்டுத்தான் ஆகணும்.
நன்கொடையாவும், ஃபீசாவாகவும் பிடுங்கிச் சேர்த்தவனை அடித்து துவைத்து, அவன் பதுக்கி வைத்திருந்த பணத்தையெல்லாம் வெளியே பறக்க விடுகிறார் சிவாஜி.
படிக்கிற பசங்க அதை பொறுக்கி எடுத்துட்டு ‘நாம கொடுத்த பணமெல்லாம் இப்படியே திருப்பி நம்ம கிட்ட சேந்துடும் போல இருக்கே என்கிறார்கள்
படத்தில். என்னுடைய பக்கத்திலிருந்து படம் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் இப்படிச் சொன்னார்…
‘இப்பிடியெல்லாம் பொறுக்கித்தனமா படமெடுக்கிறவனை செருப்பாலடிச்சாலும் தப்பில்லைன்னு இவ்வளவு நேரமும் நெனச்சிட்டிருந்தேன். அது ரொம்பத் தப்புன்னு இப்ப புரியுது என்று சொன்னவர், ரஜினி, ஷங்கர், சுஜாதா போன்றோரின் வீட்டு முகவரிகளை ஒவ்வொருவரிடமும் விசாரித்துக் கொண்டிருந்தார்.
எதற்காம்?
என்ன செய்யணும்னு ஷங்கரே தெளிவா சொல்றபோது வெட்டியா செருப்பெல்லாம் எதுக்கு?
எப்படியோ நல்லது நடந்தால் சரி! சமூக விழிப்புணர்வு