ராஜீவ் காந்தியைக் கொன்ற விடுதலைப் புலிகளை மறக்கவும் முடியாது, மன்னிக்கவும் முடியாது என்று வாசன், இளங்கோவன், ஜெயந்தி நடராஜன் சொல்கிறார்களே…
சாட்டை

பரிதாபத்துக்குரியவர்கள் காங்கிரசுக்காரர்கள். இந்த நேரத்தில் அவர்களுக்குத் தேவை நம்ம ஆறுதலும், தேறுதலும்தான்.
மொதல்ல ஜெயந்தி மேடத்துக்கு ஆறுதல்!
‘பாவத்தின் சம்பளம் மரணம்.’
சொல்வது பைபிள்.
சோனியா ஒரு கிறிஸ்டியன்.
அதிலும் இத்தாலியிலிருந்து வந்த ‘ட்ரூ’ கிறிஸ்டியன்.
சம்பளத்தோட சேர்த்து போனசும் வந்துடப் போவுதுன்னு அந்தம்மா மறந்திடுச்சு, மன்னிச்சிடுச்சு.
“கட்ன சம்சாரமே கமுக்கமா இருக்குறப்போ, இது ஏன் லபோ, திபோன்னு வாயிலயும், வயித்துலயும் அடிச்சுக்குது?”
சத்தியமா நாம கேக்கப் போறதில்ல. ஊரு உலகத்துல உள்ளவங்க கேப்பாங்க.
நரம்பில்லாத நாக்கு, நாலுவிதமாகப் பேசத்தான் செய்யும். அம்மணிதான் உணர்ச்சிகளை கொஞ்சம் அடக்கிக்கணும்.
அடுத்து, வாசன் வகையறாக்களுக்கு தேறுதல்.
சத்தியமூர்த்தி பவனிலிருந்து வேட்டி கிழியாம, டங்குவார் அறுந்து தொங்காம எப்படியோ தப்பி வெளியே வந்துவிடும் சாதுரியத்துக்கு மொதல்ல ஒரு சலாம் வாசன்ஜி.
புலிகளின் படுபாதகச் செயலை மறக்க முடியாம தினமும் நீங்க பாய்ல பொரண்டு பொரண்டு படுக்குறதக் கேட்டா நமக்கும் தூக்கம் வரமாட்டேங்குது.
“ரெண்டு கிலோ புளுத்த அரிசிக்காக ராப்பகலா ரேஷன் கடை வாசல்ல படுக்க வச்சி வருசம் நாப்பது ஆச்சு. அத இன்னும் மறக்காம நீங்க இருக்கலாம், நாங்க மட்டும் மறந்துடணுமா?”ன்னு எதிர்கேள்வி போடுறது எங்களுக்குப் புரியாம இல்ல.
எங்க கவலையெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான்.
என்னதான் காங்கிரசுக்காரனா இருந்தாலும் தமிழனாச்சே என்ற பாசத்துல சொல்லி வைக்கிறோம்.
ராஜீவுக்காக புலிகளை மறக்க முடியலைன்னு இங்கே சொல்ற மாதிரி, இந்திரா படுகொலைக்காக சீக்கியர்களை மறக்க முடியாதுன்னு பஞ்சாப்பில போய் சொல்லி வைக்காதீங்க.
‘தலப்பா கட்டுங்க’ அடிக்குற அடியில புத்தூர் கட்டு போடுற மாதிரியாயிடும்.
ஜாக்கிரதை!
-சமூக விழிப்புணர்வு